54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை தனது சுயரூபத்தை காட்டியுள்ளது - மீனவ அமைப்பு கருத்து


இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள்.
x
இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள்.
தினத்தந்தி 26 March 2021 3:48 AM GMT (Updated: 26 March 2021 3:48 AM GMT)

ஐ.நா. சபை தீர்மான விவகாரத்தால்தான் 54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை அரசு தனது சுய ரூபத்தை காட்டியுள்ளது என மீனவ அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ராமேசுவரம், 

ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 படகுகள் மற்றும் 54 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாம்பனில் உள்ள நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் கூறியதாவது:-

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை அரசு நினைத்து வருகிறது. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.

இந்த பிரச்சினை குறித்து இலங்கை அரசு ஐ.நா. மன்றத்தில் வாதாடாமல் அந்த கோபத்தையும், தனது சுய ரூபத்தையும் மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது காட்டி வருகிறது.

ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை ஒரே நாளில் 50-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது இல்லை.

இதற்கு முன்பு அதிகமான மீனவர்கள் பிடிபட்டு இருந்தாலும் அந்த மீனவர்களை எச்சரிக்கை செய்து இலங்கை கடற்படை உடனே அனுப்பி வைத்தது. ஆனால் இந்த முறை 54 மீனவர்களையும், பறிமுதல் செய்த 5 படகுகளையும் இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் விஷயத்தில் இலங்கை அரசு மனிதாபிமானம் இல்லாமல்தான் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.

மத்திய அரசு இலங்கை அரசுடன் உடனடியாக பேசி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரையும், படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் சார்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி தேவதாஸ் கூறியதாவது:-

ஒரே நாளில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டாமல் உடனடியாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்கள் 54 பேரையும் படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story