தனி விமானத்தில் மதுரை வருகை: மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் இன்று பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பேசுகிறார்


தனி விமானத்தில் மதுரை வருகை: மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் இன்று பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 2 April 2021 12:45 AM GMT (Updated: 2 April 2021 12:25 AM GMT)

மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு மதுரை வந்தார். வேட்டி, சட்டை அணிந்து வந்த அவர், மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மதுரை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த 30-ந் தேதி தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக மோடி நேற்று இரவு மதுரை வந்தார்.

இதற்காக கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இரவு 8.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்திறங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேட்டி-சட்டையில் வந்தார்

பின்னர் அவர் காரில் புறப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையில் வந்திருந்தார். அவரை பார்த்த பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். மோடியும் உற்சாகம் அடைந்து பக்தர்களை நோக்கி கை அசைத்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் அதிகாரிகள் அவரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அழைத்துச் சென்றனர். கோவிலில் உள்ள பிரமாண்ட தூண்களில் உள்ள சிற்பங்களையும், கோவில் விதானத்தில் வரையப்பட்டு இருந்த ஓவியங்களையும் பார்த்து ரசித்தப்படியே மூலஸ்தானத்தை நோக்கி சென்றார்.

நாதஸ்வர கலைஞர்கள் கைகூப்பி பிரதமரை வணங்கினர். பதிலுக்கு மோடியும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பொற்றாமரை குளம் அருகே நடந்து சென்ற போது அதன் பெருமைகளை மோடியிடம் விளக்கினார்கள்.

தரிசனம்

விநாயகர், முருகப்பெருமான் சன்னதியில் சாமி கும்பிட்டு விட்டு மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மோடி சென்றார். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு, தொடர்ந்து சுந்தரேசுவரர் சன்னதிக்கு சென்றும் பயப்பக்தியுடன் தரிசனம் செய்தார்.

கோவில் சார்பில் அவருக்கு நினைவுப்பரிசு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் அவர் காரில் புறப்பட்டு, திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

3 ஆயிரம் போலீசார்

மோடி தங்கிய இடம், அவர் வந்து சென்ற சாலைகள், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் பகல் 11 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்கிறார்.

நாகர்கோவிலில் பிரசாரம்

மதுரையில் பிரசார கூட்டம் முடிந்த பின்னர் விமானத்தில் மோடி கேரள மாநிலம் பத்தனம்திட்டை சென்று அங்கு பிரசாரம் செய்கிறார். பின்னர் அவர் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பகல் 2.30 மணி அளவில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரசாரம் செய்கிறார்.

அதன்பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார்.

Next Story