அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 April 2021 2:25 AM GMT (Updated: 8 April 2021 2:25 AM GMT)

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட்டு, தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அரியர் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசு அறிவித்தது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

எதிர்ப்பு

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது விதிகளுக்கு முரணானது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்தன. இந்த நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், சட்டப்படிப்பு, விவசாயப் படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியர் படிப்பு உள்ளிட்ட படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து இந்த படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன’ என்றார்.

எளிய முறை தேர்வு

மேலும், ‘பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு வக்கீல், ‘கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தேர்வுகள் நடத்தவேண்டாம் என்று யு.ஜி.சி. தெரிவிக்கவில்லை’ என்று வாதிட்டார்.

ஏற்க இயலாது

அதையடுத்து நீதிபதிகள், ‘அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தினார்கள்.

மேலும், ‘தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சமரசம் கூடாது

‘கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல், ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story