சென்னை பல்கலைக்கழக 163-வது பட்டமளிப்பு விழா 1,37,745 பேருக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்


சென்னை பல்கலைக்கழக 163-வது பட்டமளிப்பு விழா 1,37,745 பேருக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
x
தினத்தந்தி 9 April 2021 12:13 AM GMT (Updated: 9 April 2021 12:13 AM GMT)

சென்னை பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 745 பேருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வரவேற்புரை வழங்கியதோடு, பட்டமளிப்பு விழா ஆண்டறிக்கையையும் வாசித்தார். விழாவில், 3 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும், 683 பேருக்கு ஆராய்ச்சி படிப்புக்கான பட்டமும், 86 பேருக்கு முதல்நிலை தகுதி சான்றிதழும், 93 பேருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளும், 7 பேருக்கு சிறந்த ஆய்வேட்டுக்கான விருதும் என மொத்தம் 872 பேருக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

கவர்னர் வழங்கினார்

இதுதவிர, பல்கலைக்கழக துறை சார்ந்த மற்றும் இணைப்பு கல்லூரிகளில் நேரடியாக படித்து முடித்த 1 லட்சத்து 24 ஆயிரத்து 862 பேர், தொலைதூரக் கல்வி மூலம் படிப்பை முடித்த 12 ஆயிரத்து 11 பேருக்கு அந்தந்த கல்லூரிகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. அந்தவகையில் இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 745 பேருக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

3 பேருக்கு மட்டும் பட்டம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நேரடியாக பட்டம் பெற வந்திருந்த 872 பேரில், கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற 3 பேருக்கு மட்டுமே கவர்னர் பட்டங்களை வழங்கினார்.

மீதமுள்ளவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரியும், சிறப்பு விருந்தினர் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியும் வழங்கினர்.

ஐகோர்ட்டில் வழக்கு

அரியர் தேர்வு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், பட்டம் பெற்றவர்களில் சிலர் அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களாகவும் உள்ளனர் என்ற தகவல் வெளியானது. ஆனால் பல்கலைக்கழகம் அதை உறுதிப்படுத்தவில்லை.

Next Story