முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் அனுமதி இல்லை; மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு


முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் அனுமதி இல்லை; மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 April 2021 12:03 AM GMT (Updated: 12 April 2021 12:03 AM GMT)

முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள், தமிழக அரசின் உத்தரவின்படி இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

வங்கிகளில் நிலையான செயல்பாடுகள்
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரை தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கிகளில் பின்பற்றவேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.அதன்படி, வாடிக்கையாளர்கள் முககவசம் அணியாமல் வங்கிக்குள் வர அனுமதிக்கக் கூடாது. முககவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்கள் வங்கியை விட்டுச் செல்லும் வரை வாய் மற்றும் மூக்கை மூடும்வகையில் அணிந்திருக்க வேண்டும்.

வங்கியில் அதிக கூட்டம்
வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடுதல் இல்லாதவகையில் கிருமிநாசினி திரவம் மற்றும் கை கழுவும் திரவங்களை வங்கி வாசலிலும், வளாகத்தின் பொது இடத்திலும் வைக்க வேண்டும். வங்கியில் அதிக கூட்டம் கூடுவதைத் தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அலுவலக லிப்டுகளில் உடல் எடையைப் பொறுத்து இரண்டு அல்லது நான்கு நபர்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே, தனிமனித இடைவெளியை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வங்கிக் கிளைகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அரசு விதிகளின்படி, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது. அவற்றை உடனடியாக அமல்படுத்தி வருகிறோம்.

இந்த தகவல்களை மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Next Story