கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 April 2021 1:52 AM GMT (Updated: 15 April 2021 1:52 AM GMT)

வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இவ்வாறு சில இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை) பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்கிறது. அதன்படி, 15-ந்தேதி (இன்று) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலான காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

16-ந் தேதி (நாளை) தென்தமிழகம், வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story