தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 15 April 2021 7:24 AM GMT (Updated: 15 April 2021 7:24 AM GMT)

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. அதிலும் கடந்த மாதத்தின் இறுதியில் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது. கரூர், வேலூர், திருத்தணி உள்பட சில இடங்களில் 105 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இவ்வாறு சில இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை) பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் 17ஆம் தேதிமுதல் படிப்படியாக மழை குறையும்.

நாளை நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story