தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல் 250 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைப்பு


தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல் 250 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைப்பு
x
தினத்தந்தி 20 April 2021 1:12 AM GMT (Updated: 20 April 2021 1:12 AM GMT)

தமிழகத்தில் தீவிரமாக கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 250 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை,
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் பரவத்தொடங்கியது. அதிகபட்சமாக ஜூலை மாதம் 27-ந் தேதி 6 ஆயிரத்து 993 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டநிலையில், பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி, குறைந்த அளவாக 438 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தநிலையில், தேர்தல் பிரசாரம் போன்றவற்றில் மக்கள் அதிகம் கூடிய காரணத்தால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. முககவசம் அணிவதை தீவிரப்படுத்த அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

என்றாலும், கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதன் அடிப்படையில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், போலீஸ் உயர் அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.

ஊரடங்கை மீறி யாராவது வாகன சோதனையின்போது சிக்கினால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கடந்தமுறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது தமிழகத்தில் 64 இடங்களில்தான் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும், தற்போது3 மடங்கு உயர்த்தி 250-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தெரிவித்தார்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், இரவு நேரங்களில் தொலைதூரம் இயக்கப்படும் பஸ்கள் செல்லாது.

அதேநேரத்தில், நீண்டதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். இந்த ரெயில்களில் பயணிக்க வரும் பயணிகள், வரும் வழியில் போலீஸ் சோதனை செய்யும் இடங்களில் உரிய டிக்கெட்டை காட்ட வேண்டும். அவ்வாறு காட்டும்பட்சத்தில், போலீசார் அவர்களை அனுமதிப்பார்கள்.

அதேநேரத்தில், சென்னை புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இயக்கம் குறித்து முறையான தகவல் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழக அரசு இது தொடர்பாக எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

ஆனால், மெட்ரோ ரெயில்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 11 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவை 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவந்த டாஸ்மாக் மதுபான கடைகளும், பார்களும் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story