பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நிறைவு பொதுத்தேர்வுக்கு தயாராக இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை


பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நிறைவு பொதுத்தேர்வுக்கு தயாராக இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 23 April 2021 11:00 PM GMT (Updated: 23 April 2021 11:00 PM GMT)

பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் படித்து தயாராகுவதற்கு இன்று (சனிக்கிழமை) முதல் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

சென்னை, 

பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்த நிலையில், அவர்களுக்கான தேர்வு வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த தேர்வை அரசு ஒத்திவைத்து இருக்கிறது.

பொதுத்தேர்வுக்கு முன்பாக மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். அந்தவகையில் செய்முறை வகுப்புகள் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வு கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ-மாணவிகள் 28 விதமான பாடங்களுக்கான செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 16-ந் தேதி தொடங்கிய செய்முறைத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.

மதிப்பெண் பட்டியல்

செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று (சனிக்கிழமை) முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் இணையதளம் வாயிலாக செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணை 28-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய இருக்கின்றனர்.

அதன்பின்னர், அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இன்று முதல் விடுமுறை

இந்த நிலையில் செய்முறைத் தேர்வு இல்லாத மாணவ-மாணவிகளுக்கு கடந்த 16-ந் தேதியில் இருந்து பொதுத்தேர்வுக்கு தயாராகுவதற்கு படிக்க விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது செய்முறைத் தேர்வில் பங்கேற்று அதனை முடித்த மாணவ-மாணவிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) முதல் பொதுத்தேர்வுக்கு படிப்பதற்கு விடுமுறை (ஸ்டடி ஹாலிடே) விடப்படுவதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், சில பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கும் வரை தொடர்ந்து ஆன்லைனில் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், சில பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் மூலம் வினாத்தாளை அனுப்பி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக்கான பயிற்சிகளை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Next Story