மாநில செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது; முழு முடிவுகள் தெரிய நள்ளிரவு ஆகலாம் + "||" + Tamil Nadu Assembly polls begin at 8 am tomorrow; It may take midnight to know the full results

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது; முழு முடிவுகள் தெரிய நள்ளிரவு ஆகலாம்

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது; முழு முடிவுகள் தெரிய நள்ளிரவு ஆகலாம்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 98.6 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களுக்குள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முதல்-அமைச்சர் யார்?
தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நாளை எண்ணிக்கை
சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.சென்னையில் உள்ள 3 மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன. ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் இருப்பார்கள். சென்னையில் மட்டும் ஆயிரத்து 248 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.

98.6 டிகிரி இருந்தால் அனுமதி இல்லை
காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் இந்த முறை முழு முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதி அளிக்கப்படாது.

ஏற்பாடுகள்
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முகவர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிருமிநாசினி, முக கவசம் வினியோகம் செய்ய சுகாதார குழுவினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், வாக்கு எண்ணும் அறைகளுக்கு முகவர்கள் செல்ல பிரத்யேகமாக தடுப்பு கட்டைகள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை பார்வையிடவரும் உயர் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அமர்வதற்காக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பிரத்யேக அறைகள்
மேலும், வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்ய வரும் நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், தொலைக்காட்சியினருக்கு பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் எல்.இ.டி. டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவர்களின் செல்போன்களை பாதுகாத்து வைக்க தொகுதி வாரியாக செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முகவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் பயன்படுத்துவதற்காக தற்காலிக நகரும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

திக்... திக்... தினம்
வேட்பாளர்களின் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தின் குறிப்பிட்ட பகுதி வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி, முகவர்களின் வாகனங்கள் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் வெளிப்புற பகுதியில் விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.களத்தில் உள்ள 3 ஆயிரத்து 998 வேட்பாளர்களில் வெற்றி பெறுகிறவர்கள் யார் என்பது நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெரிய இருக்கிறது. அதுவரையில் வேட்பாளர்களுக்கு திக்... திக்... தினமாக சனிக்கிழமை இருக்கப்போகிறது. தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறிய தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை : பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை :மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
2. உடல் வெப்பம் அதிகம் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது - தேர்தல் ஆணையம்
உடல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
3. வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் ; இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை அதிமுக வேட்பாளர் புலம்பல்
காங்கேயத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர், உடனடியாக அகற்றப்பட்டது
4. வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை- சத்ய பிரதா சாகு
வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
5. வாக்கு எண்ணிக்கை : வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் -தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.