அண்ணா அறிவாலயத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட மே தின நினைவு தூணுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை


அண்ணா அறிவாலயத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட மே தின நினைவு தூணுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 1 May 2021 7:53 PM GMT (Updated: 1 May 2021 7:53 PM GMT)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட மே தின நினைவு தூணுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் தினமான மே தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுவாக இந்த நாளில், தி.மு.க. சார்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் இருக்கும் மே தின நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த முறை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலேயே மே தின நினைவு தூண் செயற்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துகள். என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story