செங்கல்பட்டு அருகே, தனியாருக்கு 105 ஏக்கர் அரசு நிலத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


செங்கல்பட்டு அருகே, தனியாருக்கு 105 ஏக்கர் அரசு நிலத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2021 6:30 PM GMT (Updated: 4 May 2021 5:12 PM GMT)

செங்கல்பட்டு அருகில் 105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டுக்கொடுத்த அதிகாரிகள் மீது உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் பிரவீன்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

செங்கல்பட்டு அருகில் கருங்குழிபள்ளம் எனும் கிராமத்தில் உள்ள 105 ஏக்கர் அரசு நிலம் 53 தனிநபர்களுக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நில அபகரிப்பு குறித்து தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தபோது, அந்த புகாரை நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவு போலீசுக்கு அனுப்பாமல், திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்.

பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை சட்டவிரோதமாக கையாளும் விவகாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், வக்கீல்கள் என்று அதிகாரம் பெற்ற பலர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவும், எனக்கு பாதுகாப்பு வழங்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 105 ஏக்கர் அரசு நிலத்துக்கு தவறுதலாக அரசு அதிகாரிகள் பட்டா வழங்கிவிட்டனர். வழங்கப்பட்ட இந்த பட்டாக்களை ரத்துசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறினார்.

அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

105 ஏக்கர் அரசு நிலத்தை திரும்பத் திரும்ப தனியாருக்கு அதிகாரிகள் தவறுதலாக பட்டா போட்டு கொடுத்துவிட்டனர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி, விசாரணையை வருகிற ஜூன் 10-ந்தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story