கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்: ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்பட்ட 35 அரசு பஸ்கள் நிறுத்தம்


கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்: ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்பட்ட 35 அரசு பஸ்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 May 2021 8:38 PM GMT (Updated: 5 May 2021 8:38 PM GMT)

கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டதை அடுத்து ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்பட்ட 35 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வேலூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் தினமும் ஏராளமான நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. 

அதன்படி தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயங்க வேண்டும். அதன்பின்னர் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. அதைத்தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி நேற்று முதல் நேரக்கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வேலூர் மண்டலத்தில் இருந்து திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 12 பஸ்கள் நிறுத்தப்பட்டன. 

இதேபோன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வேலூர் வழியாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட 23 பஸ்கள் என்று மொத்தம் 35 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. அதேபோல் அந்த மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

Next Story