முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்கிறார் கவர்னர் மாளிகையில் எளிமையான விழா


முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்கிறார் கவர்னர் மாளிகையில் எளிமையான விழா
x
தினத்தந்தி 6 May 2021 12:28 AM GMT (Updated: 6 May 2021 12:28 AM GMT)

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். இதற்கான விழா, கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது.

சென்னை, 

2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் அரியணையை அலங்கரிக்க இருக்கிறார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை சட்டமன்ற தி.மு.க. தலைவராக அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர்.

சட்டமன்ற தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்க நேற்று காலை 10.25 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் வந்தார்.

அவருடன் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் வந்திருந்தனர்.

ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

கவர்னரை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தியதோடு, பூங்கொத்தும் கொடுத்தார். அப்போது அவரிடம், மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு தீர்மானக் கடிதத்தையும் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து கவர்னரும், மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பின்னர், கவர்னரிடம், மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.

கவர்னர் அழைப்பு விடுத்தார்

இதற்கிடையே ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் பன்வாரிலால் அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பட்டீல் அதற்கான கடிதத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்டியல், கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்தப் பட்டியல் தலைமைச் செயலாளர் மூலம் பொதுத்துறைக்கு அனுப்பப்படும்.

பொதுத்துறை மூலம் முதல்-அமைச்சர் மற்றும் ஒவ்வொரு அமைச்சருக்கும் அரசுத் தரப்பில் இருந்து தரப்பட வேண்டிய கார், தனிப் பாதுகாவலர் (பி.எஸ்.ஓ.), தலைமைச் செயலகத்தில் அலுவலக அறை ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.

விழாவுக்கு அழைப்பு

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதை எளிமையாக நடத்துவதாக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் இருந்து உறவினர்கள் உள்பட 200 பேர் மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கான அழைப்பிதழை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழங்கியுள்ளார். சில எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள திறந்த வெளியில் அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அனைவரும் காலை 8.30 மணிக்கே வந்துவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் ஆகியவற்றை செய்து வைக்கும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அழைப்பு விடுப்பார்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சராக பெயர் சொல்லி மேடைக்கு கவர்னர் அழைப்பார். முதலில் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் மேடைக்கு வந்ததும், கவர்னர் தொடங்கும் வாசகத்தை அப்படியே அவர் படிப்பார்.

மு.க.ஸ்டாலின் ஆகிய நான்....

அதன்படி, “மு.க.ஸ்டாலின் ஆகிய நான்” என்று தொடங்கி அந்த பிரமாணத்தை அவர் படித்து முடிப்பார். அதைத் தொடர்ந்து ரகசிய காப்புப் பிரமாணமும் அதே வகையில் செய்து வைக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள அமைச்சர் அழைக்கப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு அமைச்சராக வரிசையாக மேடைக்கு வந்து 2 உறுதி மொழி பிரமாணங்களை வாசித்து பதவி ஏற்பார்கள். அதைத் தொடர்ந்து அங்குள்ள கோப்பில் கையெழுத்திடுவார்கள்.

தலைமைச் செயலகத்திற்கு வருகை

இந்த அமைச்சரவையில் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து 29 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் தேநீர் விருந்தளிப்பார்.

அதில் பங்கேற்றுவிட்டு, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களாக அனைவரும், அவர்களுக்கென்று அளிக்கப்பட்ட கார் மற்றும் பாதுகாவலர்களுடன் தலைமைச் செயலகத்திற்கு வருவார்கள். தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் பெயர்ப் பலகை மாட்டப்பட்டு இருக்கும். மு.க.ஸ்டாலின் நேரடியாக அந்த அறைகளுக்குச் சென்று அமைச்சர்களை பொன்னாடை போர்த்தி வாழ்த்தி இருக்கையில் அமர செய்வார்.

3 கோப்புகளில் கையெழுத்து

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. அதில் ஒன்று, பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் என்ற திட்டமாக இருக்கும் என்று தெரிகிறது.

அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் மூத்தவர்களாகவும், மீதி இடங்களில் இளையவர்களை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

தற்காலிக சபாநாயகர்

அதுபோல, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் எம்.எல்.ஏ.யாக சட்டசபையில் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக தி.மு.க.வின் கூட்டணியில் வெற்றி பெற்ற வேட்பாளராக உள்ள ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டத்தை உடனே கூட்டுவார் என்றும் நம்பப்படுகிறது.

Next Story