சட்டசபை தேர்தலில் தோல்வி எதிரொலி: கமல்ஹாசன் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா


சட்டசபை தேர்தலில் தோல்வி எதிரொலி: கமல்ஹாசன் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா
x
தினத்தந்தி 6 May 2021 10:04 PM GMT (Updated: 6 May 2021 10:04 PM GMT)

சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக கமல்ஹாசன் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்திய ஜனநாய கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்பட இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் களம் கண்டது. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் வாக்குகள் சேகரித்தார். ஆனால் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை.

கமல்ஹாசன் ஆவேசம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் மட்டும், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனுக்கு நெருக்கடி கொடுத்தார். ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை தவிர, மற்ற வேட்பாளர்கள் அனைவரும் சொற்ப வாக்குகளே பெற்றிருந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3.72 சதவீத வாக்கு வங்கியை பெற்றிருந்த மக்கள் நீதி மய்யம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 2.45 சதவீத வாக்குகளை பெற்று சற்று சறுக்கலை சந்தித்திருக்கிறது.

சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக, சென்னையில் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘‘என்னோடு பயணிக்க விருப்பமில்லாதவர்கள் வெளியேறவும், விரும்புபவர்கள் உள்ளே வரவும் இரண்டு கதவுகளையும் எப்போதும் நான் திறந்தே வைத்திருக்கிறேன்.’’ என்று கமல்ஹாசன் மிகவும் ஆவேசமாக பேசினார்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை

இந்தநிலையில், சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1½ வருடங்களாக கமல்ஹாசனின் கட்சி நடவடிக்கையில் ஜனநாயகம் இல்லாதது போல் தோன்றியது. அவருடைய நிலைப்பாடு மாறப்போவது இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நான் விலகுகிறேன். தமிழகத்தை சீரமைக்கிறாரோ இல்லையோ, கட்சியை முதலில் சீரமைக்கவேண்டும். அவர் இந்த தேர்தலில் ஏமாந்தது போல, வரக்கூடிய தேர்தலில் ஏமாந்து போய் விடக்கூடாது. அவருடன் நண்பராக இருந்து உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகக்குழு ராஜினாமா

இதற்கிடையே, மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணம், கட்சி கட்டமைப்பினை வலுப்படுத்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தோல்விக்கு பொறுப்பு ஏற்று, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களான ஆர்.மகேந்திரன், எம்.முருகானந்தம், ஏ.ஜி.மவுரியா, தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் தங்களுடைய கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்யும் வகையில் கடிதங்களை கொடுத்தனர். 

Next Story