அன்னையர் தினம்: கோபாலபுரத்தில் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின்


அன்னையர் தினம்: கோபாலபுரத்தில் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 May 2021 12:05 AM GMT (Updated: 10 May 2021 12:05 AM GMT)

அன்னையர் தினத்தையொட்டி கோபாலபுரத்தில் தயாளு அம்மாளை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

சென்னை,

உலகம் முழுவதும் அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கருவறை தாங்கி, அன்பையும், பாசத்தையும் ஊட்டி வளர்த்த அன்னையர்களை பெருமைப்படுத்தும் தினமாக இந்நாள் பார்க்கப்படுகிறது. அன்னையரின் பெருமைகளை சமூக வலைத்தளங்கில் பதிவிட்டு பலரும் மகிழ்ந்ததை நேற்று பார்க்க முடிந்தது. அந்த வகையில் முகநூலும், டுவிட்டரும் அன்னையர் தினத்தில் ஆனந்தத்தில் மிதந்தது.

அன்னையர் தினத்தையொட்டி முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அன்னைக்கு முத்தமிட்டு, பூங்கொத்து கொடுத்து அவர் மகிழ்ந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் அந்த மகிழ்வில் திளைத்தார். பின்னர் அவர்கள் இருவரும் தயாளு அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

டுவிட்டரில் மகளிர் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு காக்கும்

தாய்மொழி, தாய்நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு. எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள். மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story