தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை - சென்னை முதலிடம்


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை - சென்னை முதலிடம்
x
தினத்தந்தி 10 May 2021 6:08 AM GMT (Updated: 10 May 2021 6:08 AM GMT)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மிக தீவிரமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரை அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முழு ஊரடங்கு இன்று முதல் அமலான நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் இந்த 2 தினங்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்தனர். அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால், மது பாட்டில்களை வாங்கி பதுக்கினர்.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.428 கோடியே 69 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.98 கோடியே 96 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, மதுரை மண்டலத்தில் ரூ.97 கோடியே 62 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.87 கோடியே 65 லட்சத்துக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.76 கோடியே 57 லட்சத்துக்கும், கோவை மண்டலத்தில் ரூ.67 கோடியே 89 லட்சத்துக்கும் மது வகைகள் விற்பனை ஆகியுள்ளது.

Next Story