சென்னையில் முழு ஊரடங்கு இருக்கா? இல்லையா? சாலைகளில் வழக்கம்போல ஆர்ப்பரித்து செல்லும் வாகனங்கள்


சென்னையில் முழு ஊரடங்கு இருக்கா? இல்லையா? சாலைகளில் வழக்கம்போல ஆர்ப்பரித்து செல்லும் வாகனங்கள்
x
தினத்தந்தி 13 May 2021 4:02 AM GMT (Updated: 13 May 2021 4:02 AM GMT)

சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறதா? இல்லையா? என்று சந்தேகப்படும் அளவுக்கு சாலைகளில் வழக்கம்போலவே வாகனங்கள் ஆர்ப்பரித்து செல்கின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் தவித்து வருகிறார்கள்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு வருகின்றன. ஓட்டல்கள் திறந்திருந்தாலும் ‘பார்சல்’ சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், தினமும் கடைகளுக்கு வந்து சென்று பொருட்கள் வாங்கும் போக்கை கைவிட்டு, ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிவைத்து கொள்ளவேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு அரசு வழங்கியிருக்கிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்திருக்கிறது.

அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 10-ந்தேதி, ஊரடங்கின் முதல் நாள் எப்படி இருக்குமோ... போலீசார் கெடுபிடி எப்படி இருக்க போகிறதோ... என்ற அச்சத்திலேயே ஊரடங்குக்கு தங்களை அறியாமல் ஒத்துழைப்பு வழங்கினர். வாகன நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடின. சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

ஆனால் அந்த நிலை தொடரவில்லை என்பதையே தற்போது காணும் காட்சிகள் உணர்த்தி வருகின்றன. ஏனெனில் தற்போது மக்களின் நடமாட்டம் இயல்பாகவே இருக்கிறது. பகல் 12 மணி வரை கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கிறது. காய்கறி-மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிகிறது.

சாலைகளில் ஆர்ப்பரிக்கும் வாகனங்கள்

குறிப்பாக நகரின் எல்லா சாலைகளிலும் வழக்கம்போலவே வாகனங்கள் ஆர்ப்பரித்து செல்கின்றன. இருசக்கர வாகனங்கள் புயல் வேகத்தில் செல்கின்றன. அனுமதி இல்லாத போதும், அத்தியாவசிய-அவசர தேவைகளின்றியும் ஆட்டோக்களும், கால் டாக்சிகளும் பறக்கின்றன. ஊரடங்கு காரணமாக பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படாமல் இருக்கின்றன. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்துக்கு வாகனங்களில் பாய்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

இதனால் சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கா... இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்தளவு சென்னையில் வாகன நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

போலீசாரின் கெடுபிடி இல்லை

வாகனங்களை கட்டுப்படுத்தும் போலீசாரும் தவித்து போவதையே பார்க்க முடிகிறது. அவ்வப்போது பிடிபடும் வாகன ஓட்டிகளும் ‘மருந்து வாங்க போகிறேன், ஆஸ்பத்திரிக்கு போகிறேன்’, என்று சொல்வதால் வேறு வழியின்றி அவர்களை போலீசார் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கிறார்கள். பல இடங்களில் போக்குவரத்து போலீசாரை கண்டுகொள்ளாமலேயே வாகன ஓட்டிகள் பாய்ந்து செல்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஊரடங்கின்போது போலீசாரின் கெடுபிடி மிகுதியாக இருந்தது. இதனால் சாலைகளில் செல்லவே வாகன ஓட்டிகள் பயந்தனர். அவசர தேவைகளுக்கு செல்வோர் உரிய ஆவணங்களை காட்டி அனுமதி பெற்று பயணித்தனர். அபராதம், வாகன பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஊரடங்கில் சாலைகளும் அமைதியானது. ஊரடங்கு வெற்றியும் கண்டு கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.

நடவடிக்கை வேண்டும்

ஆனால் இந்தமுறை போலீசாருக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘வாகன ஓட்டிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். கனிவாக பேசவேண்டும். வாகனங்கள் பறிமுதல் செய்யக்கூடாது’, என்பன போன்ற உத்தரவுகளை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி விதித்துள்ளார். இது வாகன ஓட்டிகளிடம் பெரும் அஜாக்கிரதையையே ஏற்படுத்தி இருக்கிறது. எப்படி சென்றாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற மெத்தனம் காரணமாக தங்கள் இஷ்டத்துக்கு வாகன ஓட்டிகள் செல்கிறார்கள். போலீசாரும் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

‘கடந்த ஊரடங்கு போலவே இந்தமுறையும் போலீசார் கெடுபிடி விதித்து நடவடிக்கை எடுத்தால் தான் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றுவோர் பயப்படுவார்கள். ஊரடங்கும் வெற்றியடையும். இல்லையென்றால் இந்த ஊரடங்கு நிச்சயம் பலன்தராது. எனவே போலீசாருக்கு உரிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’, என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story