16-வது சட்டசபைக்கு போட்டியின்றி தேர்வு: சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார் துரைமுருகன், எடப்பாடி பழனிசாமி இருக்கையில் அமர வைத்தனர்


16-வது சட்டசபைக்கு போட்டியின்றி தேர்வு: சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார் துரைமுருகன், எடப்பாடி பழனிசாமி இருக்கையில் அமர வைத்தனர்
x
தினத்தந்தி 13 May 2021 4:13 AM GMT (Updated: 13 May 2021 4:13 AM GMT)

16-வது சட்டசபைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் மு.அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். அவரை, அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் கூடிய முதல் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் எம்.எல்.ஏ. பதவியை ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில், 2-வது நாளான நேற்று சபாநாயகரும், துணை சபாநாயகரும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே, சபாநாயகர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ராதாபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவுவும், துணை சபாநாயகர் பதவிக்கு கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிச்சாண்டியும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

சபாநாயகராக பதவி ஏற்றார்

வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், இருவரும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நேற்று இருவரும் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர். காலை 10.04 மணிக்கு சபாநாயகர் இருக்கையில் அப்பாவுவை அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அழைத்து சென்று அமரவைத்தனர்.

அதன்பிறகு, சபாநாயகர் அப்பாவு தனது பணியை தொடர்ந்தார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணி சிறக்க வாழ்த்தி அனைத்து கட்சி தலைவர்களும் பேசினார்கள்.

முதலில், அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க இருக்கை

பேரவை தலைவரும், துணை தலைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிக்கு நன்றி.

சபாநாயகர் இங்கே அவரது இருக்கையில் அமர்ந்திருக்கிறார். 100 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்புமிக்க சபாநாயகர் இருக்கையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். 1919-1922-ம் ஆண்டுகளில் வெலிங்டனும், அவரது மனைவியும் இந்த இருக்கையை வழங்கினர். இந்த இருக்கையில் 100 ஆண்டுகளில் எத்தனையோ பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

நேர்மையாக நடத்துங்கள்

சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள உங்கள் மனதில் இப்போது மகிழ்ச்சி இருக்கும். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சிறிய கிராமத்தில், விவசாய குடும்பத்தில் இருந்து இந்த அளவுக்கு வந்திருக்கிறீர்கள். இந்த அவைக்கு அமைச்சர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், சபாநாயகருக்கு என்று படம், பெயர், புகழ் என்றைக்கும் இருக்கும்.

அரசியல் போராளியாக இருந்து, சுயமரியாதையை அடகுவைக்க தெரியாமல், கண்ணுக்கு தெரியாத நீதி இந்த மண்ணுக்கு வருவதற்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று வந்திருக்கிறீர்கள். இந்த சபையை நேர்மையாக நடத்துங்கள்.

இருவரும் வேண்டும்

அதேபோல், துணைத் தலைவரும் நீண்ட நெடுங்காலமாக அரசியலில் இருப்பவர். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எப்போதும் பேசமாட்டார். அவையில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். சபாநாயகர் வேகம் என்றால், துணை சபாநாயகர் நிதானம். அந்த வகையில், எங்களுக்கு இருவரும் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க. சார்பில் வாழ்த்து

16-வது சட்டசபையில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு அ.தி.மு.க. சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 1952-ம் ஆண்டு நடைபெற்ற, முதல் பொதுத் தேர்தலுக்கு பிறகு, எத்தனையோ திறமையான பேரவைத் தலைவர்களை நாம் கண்டுள்ளோம். பேரவைத் தலைவர் என்பவர் அனைத்து கட்சிக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.

அதைத்தான், இந்த அவையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் சிதைந்து இருந்தால், செல்லாமல் போய்விடும் என்று அண்ணா முன்பு கூறியதை சுட்டிக்காட்டினார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட தங்களுக்கு ஏற்கனவே ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. உறுப்பினர்கள் இங்கே பேசும்போது, உணர்ச்சிவசப்படுவார்கள். நகைச்சுவையாக பேசுவார்கள். ஆக்ரோஷப்படுவார்கள். சபாநாயகர் நடுநிலை தவறாமல் சட்டசபையை நடத்த வேண்டும். எங்களின் பூரண ஆதரவு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் ஒத்திவைப்பு

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், பா.ம.க. சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிந்தனை செல்வன், ம.தி.மு.க. சட்டமன்ற தலைவர் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் நாகை மாலி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

அதன்பின்னர், நாள் குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது.


Next Story