மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் ராஜகோபாலன் 4-ந் தேதி நேரில் ஆஜராக சம்மன்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் ராஜகோபாலன் 4-ந் தேதி நேரில் ஆஜராக சம்மன்
x
தினத்தந்தி 25 May 2021 9:02 PM GMT (Updated: 25 May 2021 9:02 PM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

சென்னை,

‘ஆன்லைன்' வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில், சென்னையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் குழந்தைகளுக்கு ராஜகோபாலன் குறுஞ்செய்தி மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரம் ஆணையத் தலைவர் டாக்டர் சரண்யா ஜெயக்குமாருக்கு தெரியவந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சூரியகலாவை உடனடியாக அப்பள்ளிக்கு சென்று அனைத்து விவரங்களையும் சேகரித்து ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் எந்தவித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.

எந்த தகவலும் கொடுக்க முடியாது

ஆணையத் தலைவர் சரண்யா ஜெயக்குமார் மூலமாக, இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பதிவேற்றம் செய்த மாணவியிடம், அப்பள்ளியில் தற்போது படித்து வரக்கூடிய பாதிப்புக்குள்ளான சில குழந்தைகளின் செல்போன் எண்கள் மற்றும் முகவரி ஆகியவற்றை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் மாணவி தற்போது படித்து வரும் மற்ற மாணவிகளுடன் தொடர்புகொண்டபோது, அவர்கள் அந்த ஆசிரியருக்கு எதிராக எந்த தகவலும் கொடுக்க முடியாது என்று தெரிவித்ததாக ஆணையத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்வதில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

இருப்பினும் கே.கே.நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அணுகி குழந்தைகள் பாதிக்கப்பட்டது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சேகரித்து அறிக்கையாக ஆணையத்துக்கு அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டது.

சம்மன்

இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர், அப்பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகி, முதன் முதலாக அச்செய்தியை பதிவேற்றம் செய்த மாணவி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக, ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமாருடன் ஆலோசனை நடத்தப்பட்டதில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி காலை 11 மணிக்கு இவர்கள் நேரில் ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆணையம் இந்த பிரச்சினையில் தீவிரத்தன்மையை உணர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story