இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை வழங்குங்கள்; அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்


இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை வழங்குங்கள்; அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 May 2021 12:49 AM GMT (Updated: 30 May 2021 12:49 AM GMT)

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் மக்களுக்கு கோவில்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உன்னதமான அன்னதான திட்டத்தினைத் தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட கூடுதல் நிதி தேவைப்படுவதால் அன்னதானத் திட்டத்திற்கு தாராளமாக நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குதலை எளிமைப்படுத்தி இணையவழியாக செலுத்தும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தை (hrce.tn.gov.in) பார்வையிட்டு அதன் முகப்பு பக்கத்தில் தோன்றும் “நன்கொடை” என்ற தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்தவுடன் பொது நன்கொடை, அன்னதானம் நன்கொடை மற்றும் திருப்பணி நன்கொடை என்ற மூன்று திட்டங்கள் இணையதளத்தில் தோன்றும். தற்போது முதற்கட்டமாக 57 கோவில்களின் பெயர்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நன்கொடை செலுத்த விரும்புவோர் கோவில்களில் எந்த கோவிலுக்கு தாங்கள் நன்கொடை செலுத்த விரும்புகிறீர்களோ அந்த கோவிலைத் தேர்வு செய்ய வேண்டும்.

நன்கொடை செலுத்த விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, அஞ்சலகக்குறியீடு, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செலுத்த விரும்பும் தொகை ஆகியவற்றைக் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். வருமானவரி விலக்கு பெற விரும்பினால் தங்களது நிரந்தர கணக்கு எண்ணையும் (PAN) பதிவு செய்ய வேண்டும்.

நிதி பரிவர்த்தனை செய்ய விரும்புவோர் பற்று அட்டை, கடன் அட்டை, மற்றும் இணையவழி வங்கி சேவை வாயிலாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கட்டண செலுத்து முறை வழியாக நிதி பரிவர்த்தனை செய்யலாம். அவ்வாறு செலுத்தப்படும் நிதியானது, சம்பந்தப்பட்ட கோவில்களின் பெயரில் பராமரிக்கப்படும் வங்கி கணக்கிற்கே நேரடியாக சென்றுவிடும்.

நிதி பரிவர்த்தனை செய்து முடித்தவுடன், பரிவர்த்தனை குறித்த ஓர் ஒப்புகை அட்டை தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அன்னதான திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு, இந்திய வருமான வரி சட்டத்தின் பிரிவு 80ஜி-இன் கீழ் வரிவிலக்கும் உண்டு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story