2-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வாகன தணிக்கையில் மும்முரம்


2-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வாகன தணிக்கையில் மும்முரம்
x
தினத்தந்தி 31 May 2021 10:45 PM GMT (Updated: 31 May 2021 10:45 PM GMT)

தமிழகம் முழுவதும், 2-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாகன தணிக்கையிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடந்த 24-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தளர்வில்லா முழு ஊரடங்கு 2-ம் கட்டமாக நேற்று முதல் நீடிக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு நடைமுறைகளின்படி, தமிழகம் முழுவதும் காய்கறி-மளிகை என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

சென்னையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என தனித்தனியே வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் சாலைகள் மற்றும் வாகனங்களில் சுற்றுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளையில் ஓட்டல்களிலும் பார்சல் சேவை முறைப்படுத்துவது, ஆன்லைன் உணவு வினியோக பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ஊரடங்கு விதிமுறைகளை தெரியப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்னமும் நகரின் சில பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் டீ மற்றும் சிற்றுண்டி விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது.

இதனால் ரோந்து வாகனங்களில் சென்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் போலீசார் முனைப்பாக பணியாற்றி வருகின்றனர்.

Next Story