கருப்பு பூஞ்சை தாக்கிய நோயாளிகளுக்கு என்னென்ன முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? டாக்டர்களுக்கு அறிவுரை


கருப்பு பூஞ்சை தாக்கிய நோயாளிகளுக்கு என்னென்ன முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? டாக்டர்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 1 Jun 2021 9:04 PM GMT (Updated: 1 Jun 2021 9:04 PM GMT)

கருப்பு பூஞ்சை தாக்கிய நோயாளிகளுக்கு என்னென்ன முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி டாக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

சென்னை,

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர், இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர், அனைத்து மருத்துவர், ஆயுஷ் மருத்துவர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோயாளிகள் சிலருக்கு சமீபத்தில் மியுகோமைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக தெரியவந்துள்ளது. இது தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நோயாகும்.

இந்த நோய் குறித்து ஆராய்ச்சி செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க மருத்துவ நிபுணர் குழுவை அரசு நியமித்துள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

தகவல் அளிக்க வேண்டும்

இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான் மிகச்சிறந்த வழி. கருப்பு பூஞ்சை நோய் பற்றி தெரியவந்தால் டாக்டர்கள், மருந்து கடைக்காரர்கள், தொழிற்சாலை மேலாளர், லாட்ஜ் நிர்வாகி, குடும்பத் தலைவர், எந்தவொரு நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் அளிக்க வேண்டும்.

கருப்பு பூஞ்சை நோய் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் அளவு, ஸ்டிராய்டு மருந்து பயன்பாட்டினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பது, நீண்ட நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆகியோருக்கு கருப்பு பூஞ்சை தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

மூக்கு, கண்களைச் சுற்றி வலிப்பது, அங்கு கருத்தோ சிவந்தோ காணப்படுவது, காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், இருமல், ரத்த வாந்தி, மூக்கில் கருப்பு, ரத்தமாக நீர் ஒழுகுவது, கழுத்து எலும்புகளில் வலி,

முகத்தில் ஒரு பக்கமாக வலிப்பது, வீக்கம், உணர்ச்சியற்றுப் போதல், பல் வலி, பற்கள் உறுதியற்று போவது, கண் மங்கலாக அல்லது இரண்டு காட்சிகளாக தெரிதல், திடீரென்று கண் தெரியாமல் போவது, நெஞ்சுவலி, மாறுபடும் மனநிலை போன்றவை கருப்பு பூஞ்சை பாதிப்பின் அறிகுறிகளாகும்.

என்ன செய்ய வேண்டும்?

முதலில் அவர்களின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்டிராய்டு மருந்தை குறைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை நிறுத்த வேண்டும். ஆக்சிஜன் அளிக்கும்போது ஈரப்பதமூட்டிகள் தினமும் டிஸ்டில்ட் நீர் மூலம் நிரப்பப்பட வேண்டும். அதில் குழாய் தண்ணீர், மினரல் வாட்டர் பயன்படுத்தப்படக்கூடாது.

சுய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டாம். மருத்துவர்களின் உதவி அவசியம். அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவர்களை நாடுவதோடு, அவர்கள் அளிக்கும் சிகிச்சையை தொடருங்கள். அடிப்படை சுகாதாரத்தை பின்பற்றுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story