குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்


குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:00 PM GMT (Updated: 2 Jun 2021 10:00 PM GMT)

குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரிக்கு எதிரான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2018-ம் ஆண்டு நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி காசிராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு காரணமாக 2018-ம் ஆண்டு மே மாதம் காசிராம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்க காலத்தில் அவருக்கு ஊதியத்தில் 50 சதவீதம் வாழ்வாதார படி வழங்கப்படுகிறது.

பணியிடை நீக்கம் ஆய்வு

இந்நிலையில், அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘6 மாதங்கள் கடந்தும் எனக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அதனால், பணியிடை நீக்க காலத்துக்கான வாழ்வாதார படியை 75 சதவீதமாக அதிகரித்து வழங்கவும், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த டி.என்.பி.எஸ்.சி., மனுதாரரின் பணியிடை நீக்க உத்தரவு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. அதனால் அவரை மீண்டும் பணியில் சேர்க்க முடியாது என்று கூறப்பட்டது.

உரிமை கோர முடியாது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்த பின், இடைநீக்க காலத்துக்கான வாழ்வாதார படியை 75 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மனுதாரர் உரிமையாக கோர முடியாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவு எடுக்க வேண்டும். காசிராம்குமாருக்கு எதிரான துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று உத்தரவிட்டார்

Next Story