கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை - லாரி டிரைவர் கைது


கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை - லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 7:36 PM GMT (Updated: 5 Jun 2021 7:36 PM GMT)

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியின் கழுத்தை தாலி கயிற்றால் இறுக்கி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது31). லாரி டிரைவர். இவரது மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் 2 பேரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு பவ்யா (7) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி மகன் இறந்து விட்டான்.

இதனிடையே ரஞ்சிதாவுக்கும், தர்மபுரி மாவட்டம் அரூரில் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த அமல்ராஜ், மனைவி ரஞ்சிதாவை கண்டித்தார். ஆனாலும் ரஞ்சிதா தங்கராஜுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரஞ்சிதா வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமல்ராஜ் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் ரஞ்சிதா கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் ரஞ்சிதா, கள்ளக்காதலன் தங்கராஜ் வீட்டில் இருப்பதாக அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அமல்ராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரஞ்சிதாவை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்காதல் மற்றும் அவர்களுக்கு இருந்த கடன் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அமல்ராஜ் தனது கையால் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்தார். மேலும், தாலி கயிற்றாலும் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் நிலைகுலைந்த ரஞ்சிதா மயங்கி விழுந்தார். இதையடுத்து தங்கராஜ் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவில் வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார்.

நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அமல்ராஜை எழுப்பி, ரஞ்சிதா வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமல்ராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் ரஞ்சிதாவை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story