குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: கல்வி அளித்து ஒளியேற்றுவோம் - மு.க.ஸ்டாலின்


குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: கல்வி அளித்து ஒளியேற்றுவோம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:28 AM GMT (Updated: 11 Jun 2021 10:28 AM GMT)

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து, அவர்களுக்கு கல்வி அளித்து வாழ்வில் ஒளியேற்றுவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,

இப்பூமியில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை என்பனவாகும். அந்த உரிமைகளை அவர்களிடமிருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் நலன் பேணும் நெறியில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் நாள் ஜூன் 12. குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைச் சீர்கெடாமல் இருக்க விழிப்புணர்வை விதைக்கும் நாள் இது.
நாளைய நவீன உலகை உருவாக்கும் சிறந்த சிற்பிகள் நம் குழந்தைச் செல்வங்கள். ஆற்றல்மிக்க அவர்களது திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை மேம்படுத்தி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களை கருத்தோடு பராமரிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும். கல்விச் செல்வம் பெற வேண்டிய சமயத்தில், கடுமையான வேலைச் சுமைகளைச் சுமந்து நிற்கின்ற பிஞ்சு குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறை என்ற கொடுமையான வன்முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழக அரசின் குறிக்கோளாகும்.

அக்குறிக்கோளை அடையும் பொருட்டு அனைத்து வகையான தொழிலகங்களிலிருந்தும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம் என்ற நிலையினை தமிழ்நாட்டில் கொண்டுவர, அனைத்து ஆக்கபூர்வமான செயல்திட்டத்தினையும் துரிதமாக நடைமுறைப்படுத்திடப் புதிதாக பொறுப்பேற்றுள்ள இவ்வரசு உறுதி பூண்டுள்ளது.

நம் அரசு குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிடும் வகையில், பணியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு அரசின் மூலமாக சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை, உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் ரூ.500/- வீதம் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது ஒன்றிய அரசால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான தொழில்களில் அமர்த்தப்படுவதை முற்றிலுமாக தடை செய்து வெளியிடப்பட்ட சட்ட திருத்தத்தை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை, குழந்தைத் தொழிலாளர்களற்ற மாநிலமாக மாற்ற நம் அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அரசு, அரசு சாரா நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொது மக்கள் ஆகிய அனைவரும் சீரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story