பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது - எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா தேர்வு செய்யப்படுகிறார்கள்


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது - எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா தேர்வு செய்யப்படுகிறார்கள்
x
தினத்தந்தி 13 Jun 2021 7:57 PM GMT (Updated: 13 Jun 2021 7:57 PM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்தாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் 65 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில், கூட்டம் முடிவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமல் அந்த கூட்டம் முடிவடைந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட தொடங்கினர். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடிப்பதாக கூறப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், சசிகலா அ.தி.மு.க. தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா அ..தி.மு.க.விலேயே இல்லை எனவே அவரது ஆடியோ பற்றி கவலையில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். ஆனால் சசிகலா ஆடியோ குறித்து ஓ.பன்னீர்செல்வம் எந்தவொரும் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் வரும் 21-ந்தேதி கூட இருக்கும் சட்டசபை கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. சட்டசபை கூட்டம் தொடங்க இருப்பதால் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. கொறடா பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி, மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் சசிகலா ஆடியோ தொடர்பாகவும், இதனால் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. எனவே இந்த கூட்டம் அ.தி.மு.க. தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story