உல்லாச வாழ்க்கைக்காக கஞ்சா கடத்திய கோவை காதல் ஜோடி சூர்யா- தமன்னா கைது


உல்லாச வாழ்க்கைக்காக கஞ்சா கடத்திய கோவை காதல் ஜோடி சூர்யா- தமன்னா கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 10:36 AM GMT (Updated: 2021-06-16T16:06:40+05:30)

உல்லாச வாழ்க்கைக்காக கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் ஓரு காதல் ஜோடியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீளமேடு:

கோவை கிழக்கு உதவி கமி‌ஷனர் அருண், பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் பீளமேடு அடுத்த நேரு நகர் வீரியம் பாளையம் ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் சுற்றி திரிந்தார். இதை பார்த்த போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த மோட்டார் சைக்கிளை மறித்து, அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து போலீசார் வாலிபர் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தனர். உடனடியாக போலீசார் அவர்கள் 2 பேரையும் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டம் காந்தி மாநகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற சூரிய பிரகாஷ்(வயது21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து பாதியில் படிப்பை விட்டவர். விருதுநகரை சேர்ந்தவர் தமன்னா என்கிற வினோதினி(21). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார்.

அப்போது வினோதினிக்கும், பிரகாசுக்கும் நட்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அடிக்கடி 2 பேரும் செல்போனில் பேசி காதலை வளர்த்தனர். மாணவி படிப்பு முடிந்ததும் ஊருக்கு செல்லாமல் காதலருடன் சுற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் காந்தி மாநகர் பகுதியில் எடுத்து தங்கி இருந்தனர். அப்போது அவர்களுக்கு செலவுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. சிறு, சிறு வேலைகளுக்கு சென்றும் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், கஞ்சாவை வாங்கி வந்து விற்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் பிரகாஷ் கல்லூரியில் படிக்கும் போது அவரது நண்பர்கள் அவரை சூர்யா என்றே அழைத்து வந்துள்ளனர். கஞ்சா விற்க ஆரம்பித்ததும், சூரிய பிரகாஷ் தனது பெயரை சூர்யா என்றே எல்லோரிடமும் தெரிவித்தார். இதேபோன்று தனது காதலி பெயரையும் மாற்ற சொல்லியுள்ளார். இதையடுத்து அவர் தனது பெயரை தமன்னா என மாற்றி கொண்டார். இவர்கள் 2 பேரும் சூர்யா, தமன்னா என்ற பெயரிலேயே கோவை பகுதிகளில் உலாவந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு வேறு கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு உள்ளதா? இதுபோன்று வேறு எங்காவது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 


Next Story