வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா


வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா
x
தினத்தந்தி 18 Jun 2021 5:51 PM GMT (Updated: 2021-06-18T23:21:11+05:30)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக கடந்த 3-ந்தேதி கண்டறியப்பட்டது. இதில் நீலா என்ற 9 வயதுள்ள பெண் சிங்கம் உயிரிழந்தது. அதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்மநாபன் என்ற 12 வயதுள்ள ஆண் சிங்கம் உயிரிழந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிங்கம் உயிரிழந்ததாகவும், மேலும் கவிதா, புவனா என்ற 2 பெண் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ள சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் உதவியுடன் ஆன்டிபயாடிக் (நுண்ணுயிரி எதிர்ப்பு) மற்றும் பிற நோய்த்தடுப்பு மருந்துகள் தரப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த 4 சிங்கங்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த 4 சிங்கங்களும் தனிமையில் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story