ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் கவர்னர் உரையில் அறிவிப்பு


ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் கவர்னர் உரையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 8:22 PM GMT (Updated: 21 Jun 2021 8:22 PM GMT)

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு

* ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும். ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும்.

* தி.மு.க. அரசு பிறப்பித்த முதல் 5 உத்தரவுகளில் ஒன்றாக, நடுத்தர வகுப்பினருக்கு பெரும் பயனளிக்கும் வகையில், ஆவின் பாலின் சில்லரை விற்பனை விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விற்பனையும் ஏறத்தாழ 1.5 லட்சம் லிட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

நீட் தேர்வு விலக்கு கோரி சட்டம்

* சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

மதுரையில் நவீன நூலகம்

* அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில், ரூ.70 கோடி செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

* தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும். பழங்காலக் கோட்டைகளும், அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

கோவிலில் உயர்மட்ட குழு

* கோவில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும். அனைத்து முக்கிய இந்துக் கோவில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோவில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனை குழு மீண்டும் அமைக்கப்படும்.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புத்துயிர்

* தமிழ்நாட்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயன் தரக்கூடிய நிதிச்சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், மகளிர் சுயஉதவி குழு இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். சுயஉதவி குழுக்களின் பொருளாதாரச் செயல்பாடுகளை உயர்த்துவதற்காக, அவர்களுக்கு வங்கி கடன் வழங்கும் வழிவகைகள் வலுப்படுத்தப்படும். இணையவழி வணிகம் உள்பட மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளையும் இந்த அரசு செம்மைப்படுத்தும்.

Next Story