மாநில செய்திகள்

பராமரிப்பு பணிகள் 10 நாட்கள் நடைபெற்று முடிந்ததும் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது சட்டசபையில் அமைச்சர் உறுதி + "||" + After 10 days of maintenance work, the Minister assured the Assembly that there would be no power cuts in Tamil Nadu

பராமரிப்பு பணிகள் 10 நாட்கள் நடைபெற்று முடிந்ததும் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது சட்டசபையில் அமைச்சர் உறுதி

பராமரிப்பு பணிகள் 10 நாட்கள் நடைபெற்று முடிந்ததும் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது சட்டசபையில் அமைச்சர் உறுதி
பராமரிப்பு பணிகள் 10 நாட்கள் நடைபெற்று முடிந்ததும் தமிழ்நாட்டில் மின்வெட்டு இனி இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,

உறுப்பினர் சு.ரவி:- கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தம் உள்ள 48 பக்கத்தில் நோக்கம் எதுவும் இல்லை. தற்போது, கொரோனா பரிசோதனை முடிவு 3 நாட்களுக்கு பிறகே வருகிறது. எனக்கு கடந்த 18-ந்தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் முடிவு 20-ந்தேதிதான் தெரிந்தது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கே பரிசோதனை முடிவு வெளிவர 3 நாட்கள் ஆகிறது என்றால், மற்றவர்களுக்கு எவ்வளவு தாமதமாகும்?. கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்குவதாக சொன்னீர்கள். ஆனால், அறிவிப்பு எதுவும் வரவில்லை.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- கடந்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில்தான், முடிவு வெளிவர ஓரிரு நாட்கள் ஆனது. இப்போது, முதல்-அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க, 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவு தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்குவதாக கூறியதாக உறுப்பினர் சொல்கிறார். அது வதந்தி. மத்திய, மாநில அரசுகள் அப்படி எதுவும் சொல்லவில்லை.

ஆனால், இப்போது கொரோனாவால் தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். எனவே, கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்குவது என்பது சாத்தியமற்றது.

தடுப்பூசி பற்றாக்குறையா?

உறுப்பினர் சு.ரவி:- தற்போது கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறது. அதனால், ஊசி போட வருபவர்கள், ஊசி போடாமல் திரும்பிச்செல்கிறார்கள்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- இதுவரை 1 கோடியே 29 லட்சம் தடுப்பூசிகள் முறையாக பெறப்பட்டு போடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடத்தொடங்கியபோது, தினமும் சராசரியாக 61 ஆயிரத்து 441 பேருக்குத்தான் போடப்பட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பெற்ற பிறகு 1 லட்சத்து 34 ஆயிரத்து 926 பேருக்கு போடப்பட்டு வருகிறது. நேற்று (அதாவது 21-ந்தேதி) அதிகபட்சமாக 3 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில், முறையாக தடுப்பூசி போடப்படுவதால்தான் 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு கூடுதலாக தந்துள்ளது.

மதுக்கடைகள் திறப்பு ஏன்?

உறுப்பினர் சு.ரவி:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடச்சொல்லி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினீர்கள். ஆனால், இப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும்போதும் மதுக்கடைகளை திறந்துள்ளீர்கள்.

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:- தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மேற்கு மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. பாதிப்பு குறைந்த இடங்களில்தான் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. கர்நாடகாவில் இருந்து காய்கறி லாரிகளில் மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டு, ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுக்கடைகள் திறந்திருந்தபோது, கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரிலேயே அடைக்கப்பட்டது. அந்தநிலை இப்போது இல்லை.

எந்த தவறும் இல்லை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- கொரோனா பாதிப்பு அப்போது குறைவு. ஆனால், மதுக்கடைகளை மூடச் சொன்னார்கள். இப்போது, கொரோனா பாதிப்பு அதிகம். அதனால், எங்கள் உறுப்பினர் மதுக்கடைகளை மூடலாம் என்று கூறினார். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அமைச்சர் அதை மறைத்து பேசுகிறார். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடச்சொல்லி அப்போது போராட்டம் நடத்தினீர்கள்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- கடந்த மாதம் (மே) 7-ந்தேதி வரை அ.தி.மு.க. அரசுதான் காபந்து அரசாக செயல்பட்டது. அன்றைய தினம் கொரோனா பாதிப்பு 26,405 ஆக இருந்தது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முதலிடம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- தமிழகத்தில் 26-2-2021 அன்று 481 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. அப்போது, சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. அதனால், அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. இருந்தாலும், தலைமைச்செயலாளருடன் பேசி மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த கூறினேன்.

ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர் கூறினார். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால், தேர்தல் ஆணையத்தில் இருந்து பதில் கடிதம் தலைமை செயலாளருக்குத்தான் வந்தது. தலைமைச் செயலாளர்தான் ஆலோசனை நடத்தினார். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது.

ராஜ கண்ணப்பன் ஆவேசம்

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு:- 26-2-2021-க்கு பிறகு தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகும் அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அதை அனைவரும் டி.வி.யில் பார்த்தோம். அப்படி என்றால், அரசு செயல்பட்டு கொண்டுதானே இருந்தது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- அவர் பேட்டி கொடுத்திருக்கமாட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.

அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்:- நீங்கள் ஆட்சியில் இருந்தபோது நோயின் வீச்சை பொறுத்து அதை கட்டுப்படுத்தினீர்கள். நாங்களும் நோயின் வீச்சைப் பொறுத்து இப்போது கட்டுப்படுத்தினோம்.

(இந்த நேரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் எழுந்து, துரைமுருகனுடன் ஏதோ ஆவேசமாக பேசினார். ஆனால், அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை)

மின் கட்டணம் கூடுதல் வசூலா?

உறுப்பினர் சு.ரவி:- கொரோனா நேரத்தில், தற்போது கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி:- மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 2 முறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா தாக்கம் குறைந்தபோதும், 3 வகையில் மின் கணக்கெடுப்பை முன்னெடுத்து, மக்களே கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 மாதங்களாக மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், தற்போது அந்தப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதாவது, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை. சேதமடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த மின் கம்பங்கள், தாழ்வான மின் வயர்கள் மாற்றப்படவில்லை. இப்போது, அந்தப்பணிகள் நடந்து வருகின்றன.

9 மாதம் மின்தடை இல்லை

அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்தது என்று சொன்னால், ஏன் காத்திருக்கும் 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. அதிக கட்டணம் கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால்தான் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மின் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வட்டி மட்டும் கட்டப்பட்டுள்ளது. அதாவது, குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்போது, 9.5 சதவீதத்தில் இருந்து 13 சதவீதம் வரையிலான வட்டிக்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த நிறுவனங்களுடன் பேசி, ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வட்டியில் மட்டும் சேமிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்:- தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மின்தடை ஏற்படுகிறது என்றுதான் உறுப்பினர் இங்கே கூறினார். ஆனால், அமைச்சரோ மின் தடைக்கு 9 மாதம் பராமரிப்பு இல்லை என்று காரணம் சொல்கிறார். ஆனால், மின் தடை என்பது 9 மாதம் இல்லை. கடந்த ஒரு மாதமாகத்தான் இருக்கிறது.

மின்வெட்டு இருக்காது

அமைச்சர் செந்தில் பாலாஜி:- கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்திலேயே மின் தடை இருந்தது. தற்போதைய பராமரிப்பு பணிகள் 10 நாட்களில் முடிந்து, தமிழ்நாட்டில் மின் வெட்டே இல்லை என்ற நிலை உருவாகும்.

அ.தி.மு.க. உறுப்பினர் பி.தங்கமணி:- 9 மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார். சென்னையில் புதைவடமாகத்தான் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இங்கே ஏன் மின்தடை வருகிறது?. எந்த மாநிலமும் சொந்தமாக மின்சாரத்தை தயாரித்து, மின்மிகை மாநிலமாக முடியாது.

(இந்த நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி) கடும் எதிர்ப்பு தெரிவித்தார்)

10 நாட்களில் முடியும்

அமைச்சர் செந்தில்பாலாஜி:- சென்னையில் ‘பில்லர்’ உள்ளது. அதில், ‘பியூஸ்’ போனால் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அது தெரியுமா?. கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7 வரை கொடுத்து தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் அந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் ரூ.4,300 கோடி கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது, நடைபெற்று வரும் மின் பராமரிப்பு பணிகள் 10 நாட்களில் முடியும். அதன்பிறகு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்
சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்.
2. மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்தாரர்களின் மின்சார கட்டணம் திருத்தம் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு; 41,649 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
4. இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு; கடந்த 2 நாட்களை விட சற்று உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
5. மின்தடை தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
மின்தடை தொடர்பான பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.