கொள்ளை கும்பல் தலைவனை பிடிக்க போலீஸ் வியூகம் - ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் கைது


கொள்ளை கும்பல் தலைவனை பிடிக்க போலீஸ் வியூகம் - ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 26 Jun 2021 11:47 PM GMT (Updated: 2021-06-27T05:17:34+05:30)

தமிழகத்தில் நடந்த வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு கொள்ளையன் அரியானாவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் தொடர்ந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டன. ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்காமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதன முறையில் இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. கடந்த 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையில் 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளை போனது. சென்னையில் மட்டும் ரூ.50 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் எஸ்.பி.ஐ. வங்கியின் சென்னை மண்டல பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்தார். அதன்பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விமானம் மூலம் அரியானா சென்றனர்.

கொள்ளையர்கள் அரியானாவின் மேடக் மாவட்டம் பல்லப்கர் என்ற இடத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அரியானா போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அமீர் (வயது 37) என்ற கொள்ளையன் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விமானம் மூலம் கடந்த 24-ந்தேதி இரவு சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

பின்னர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுத்தனர். ராயலாநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அமீரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.

இதில் ‘சென்னையில் ராயலா நகர், கே.கே.நகர், வடபழனி, பாண்டிபஜார், தரமணி, வேளச்சேரி ஆகிய 6 இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களை ‘கூகுள்’ பேப் உதவியுடன் அடையாளம் கண்டு கைவரிசை காட்டினோம். எங்கள் கும்பலின் தலைவர் சதக்கத்துல்கான். அவருடைய திட்டத்தின்படி அரியானாவில் இருந்து நாங்கள் ஒன்றாக வந்தோம். பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று ஏ.டி.எம். மையங்களில் பணத்தை கொள்ளையடித்தோம்.’ என்று பரபரப்பு தகவலையும், மற்ற கொள்ளையர்கள் குறித்த விவரங்களையும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்ததாக தெரிகிறது.

அதனப்படையில் தியாகராய நகர் துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் முகாமிட்டு வங்கி ஏ.டி.எம். கொள்ளை கும்பல் முழுவதையும் சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் நடிகர் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று ’ பட பாணியில் அந்த கிராமமே கொள்ளையர்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. அந்த கிராமம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

எனவே கொள்ளையர்களை நெருங்குவது மிகவும் சிரமம் என்பதால் அரியானா மாநில சிறப்பு அதிரடி படை உதவியை தனிப்படை போலீசார் நாடினர். அங்கு சிறப்பு அதிரடி படை டி.ஐ.ஜி.யாக இருக்கும் சதீஸ்பாலன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், கொள்ளையர்கள் தேடுதல் வேட்டையில் தனிப்படை போலீசாருக்கு மேலும் உத்வேகத்தை தந்தது.

இந்தநிலையில் ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய வீரேந்தர் என்ற கொள்ளையன் நேற்று போலீசார் பிடியில் சிக்கினார். சென்னை தனிப்படை போலீசாரும், அரியானா மாநில சிறப்பு அதிரடி படை போலீசார் 50 பேரும் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அமீரும், வீரேந்தரும் சென்னை அரும்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி, ஏ.டி.எம். மையங்களில் பணத்தை சுருட்டியது தெரிய வந்தது. அவர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளார். பின்னர் அவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இந்த கொள்ளை கும்பல் தலைவன் சதக்கத்துல்கான் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த அனைவரையும் கூண்டோடு கைது செய்யும் நடவடிக்கைகளில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

Next Story