பிளஸ்-2 மதிப்பீட்டுக்கு கணக்கீடு செய்ய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் எடுக்க காரணம் என்ன?


பிளஸ்-2 மதிப்பீட்டுக்கு கணக்கீடு செய்ய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் எடுக்க காரணம் என்ன?
x
தினத்தந்தி 27 Jun 2021 1:21 AM GMT (Updated: 27 Jun 2021 1:21 AM GMT)

பிளஸ்-2 மதிப்பீட்டுக்கு கணக்கீடு செய்ய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் எடுக்க காரணம் என்ன? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறைகளை அறிவித்திருக்கிறோம். இதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு 12 வகையான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திருந்தனர். பின்னர் அது 2 வகையாக குறைக்கப்பட்டது. பல விவாதங்களுக்கு பிறகு அதில் ஒரு வகை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் என்பது 10, 11, 12-ம் வகுப்புகளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இதில் 10-ம் வகுப்புக்கு மட்டும் 50 சதவீத ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஏன் என்றால், 10-ம் வகுப்பு படிக்கும்போது தான் கொரோனா தொற்று பிரச்சினையின்றி மாணவர்கள் நேரிடையாக வகுப்புகளுக்கு வந்து பாடங்கள் படித்து தேர்வு எழுதினார்கள்.

கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதிக்கு பிறகு கொரோனா காரணமாக ஊரடங்கு அமலானது. இதனால் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில தேர்வுகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் 11-ம் வகுப்பை பொறுத்தவரையில் 20 சதவீத மதிப்பெண்கள் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

தேர்வு எழுதி இருந்தால் நான் அதிகம் மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன். எனவே எங்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு தர வேண்டும் என்று மாணவர்கள் சொல்லும் பட்சத்தில் சி.பி.எஸ்.இ. போலவே, விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் முறையை கையாள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். கொரோனா கட்டுக்குள் வந்ததும், அப்படி விருப்பப்படும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். முக்கியமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் இருக்கிறார்கள். இவர்களிலும் தேர்வு எழுத விருப்பப்படுவோருக்கு, இதர மாணவர்களுடன் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். 11, 12-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் மேற்கண்ட 2 பிரிவினருடன் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்போன்’ சரியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே...

பதில்:- 2017-18-ம் கல்வியாண்டு முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு இன்னும் ‘லேப்டாப்’ வழங்கப்படாமலேயே இருந்து வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு ‘டேப்லெட்’ வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக அது வழங்கப்பட வேண்டும். கொரோனா சூழலில் மேம்பட்ட வசதிகளுடன் ‘டேப்லெட்’ வழங்கும்போது, அது மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்.

கேள்வி:- அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா?

பதில்:- நிச்சயம் அது நடைபெறும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அளவுக்கு தற்போது தமிழகத்தில் மாநில பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இதுகுறித்து விழிப்புணர்வு பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. பாடத்தில் மட்டுமல்ல உள்கட்டமைப்பிலும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

கேள்வி:- தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்தமுறை அப்படி எதுவும் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- இதுகுறித்து உரிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பள்ளிகளிடமும் உரிய விளக்கங்கள் கேட்டிருக்கிறோம். நிச்சயம் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நல்லமுறையில் நடைபெற எல்லா நடவடிக்கைகளையும் கையாண்டு வருகிறோம்.

கேள்வி:- தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டணத்தை கட்டச்சொல்லி பெற்றோருக்கு அழுத்தம் தருவதாக கூறப்படுகிறதே...

பதில்:- கட்டணம் கட்ட நிர்பந்திக்க கூடாது என்ற கோர்ட்டின் உத்தரவை காட்டி, பெரும்பாலானோர் கட்டணம் கட்டுவதே கிடையாது. எப்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வது என்று பள்ளி நிர்வாகங்கள் சார்பிலும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

Next Story