ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு - கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக நடிகர் சரத்குமார் கண்டனம்


ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு - கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக நடிகர் சரத்குமார் கண்டனம்
x
தினத்தந்தி 4 July 2021 4:35 AM GMT (Updated: 4 July 2021 4:37 AM GMT)

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு அமைந்திருப்பதாக நடிகர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை

கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. 

இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இது குறித்த தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், படைபாளியின் படைப்பிற்கு அரசாங்கம் தனது அதிகாரத்தால் அணை கட்ட நினைப்பது மடமை என்று தெரிவித்துள்ளார்.

சமூக மாற்றத்திற்கான விதைகளை தனது படைப்புகள் மூலம் வெளிக்கொணர நினைக்கும் கலைஞன் மீது சுய விருப்பு, வெறுப்புகளை திணிப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவானது ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மத்திய அரசு தடை செய்வதற்கோ, மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டுக்கு உத்தரவிடுவதற்கோ வழிவகுத்து கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அமைந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 


Next Story