வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 4 July 2021 5:01 AM GMT (Updated: 4 July 2021 5:01 AM GMT)

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை,

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதில் இருந்து வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 7-ந்தேதி (புதன்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கையின் மீது நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இதேபோல், நாளை முதல் 7-ந்தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story