கொரோனா 3-வது அலை : பயப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா 3-வது அலை : பயப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 8 July 2021 11:45 AM GMT (Updated: 8 July 2021 11:45 AM GMT)

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர், நர்சுகளை பாராட்டுகிறேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை:

சென்னை மருத்துவக் கல்லூரி மைதானம் மறுசீரமைக்கப்பட்டது. அதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
 
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2,200 படுக்கைகள் உள்ளன. ஒரு படுக்கை கூட கிடைக்காத நிலை ஒருமாதத்துக்கு முன்பு இருந்தது. தற்போது இங்கு 115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இங்கு 778 பேர் சிகிச்சை பெற்றனர். இது 5-ல் ஒரு பகுதி ஆகும். தற்போது 466 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர், நர்சுகளை பாராட்டுகிறேன்.

தடுப்பூசி பெறுவதற்காக ஒன்றிய அரசு சுகாதார அமைச்சரை சந்திக்க நாளை நேரம் ஒதுக்கி உள்ளது. இதற்கிடையில் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதால் புதிய சுகாதார அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.

ஆனாலும் திட்டமிட்டபடி இன்று மாலை சுகாதார செயலாளர் டெல்லி செல்கிறார். நாளை ஒன்றிய மந்திரியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டால் திட்டமிட்டபடி எனது பயணம் தொடரும். இல்லையென்றால் புதிய தேதி பெறப்பட்டு அதன் பின்னர் டெல்லி செல்வேன். டெல்லி செல்லும் செயலாளர் தடுப்பூசி தேவை, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து விவாதிக்கிறார்.

ஒன்றிய அரசின் அட்டவணைப்படி 11-ந்தேதி தடுப்பூசி கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி போட ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து எடுத்துரைக்கப்படும். அதற்கு முன்னதாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் நீர் நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிரோன் மூலம் கால்வாய்களில் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்குவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் சேகரிக்கப்படுகிறது.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. தற்போது 900 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது. அதனால் 3-வது அலை குறித்து பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்

Next Story