கொலை செய்யப்பட்ட கட்டிட காண்டிராக்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கொலை செய்யப்பட்ட கட்டிட காண்டிராக்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2021 8:28 PM GMT (Updated: 2021-07-14T01:58:27+05:30)

நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டர் கொலையில் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). கட்டிட காண்டிராக்டரான இவர் நேற்று முன்தினம் லோடுவேனில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கண்ணனின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் பத்மநாதன் பிள்ளை, ராமர், பெருமாள், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மதுரை, தென்காசி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் கண்ணனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் வடக்கு தாழையூத்து பகுதியில் பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கண்ணனின் கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கை உடனே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதுவரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம். தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இன்னும் 24 மணி நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு மீண்டும் சாலை மறியலில் ஈடுவோம் என்றனர். 

இந்த சம்பவத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒரு வாலிபரை போலீசார் பிடித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்தனர். இதேபோல் செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் 3 பேர் சரண் அடைந்துள்ளனர். அந்த 3 பேரையும் போலீசார் அங்கிருந்து அழைத்து வந்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கொலை நடந்த பகுதிக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story