பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு


பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு
x
தினத்தந்தி 16 July 2021 7:24 AM GMT (Updated: 16 July 2021 7:24 AM GMT)

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2 வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களை அழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

வரும் திங்கள்கிழமை (16-ந் தேதி) முதல் பள்ளி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.

Next Story