வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது நீலகிரி, கோவையில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு


வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது நீலகிரி, கோவையில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 21 July 2021 7:11 PM GMT (Updated: 21 July 2021 7:11 PM GMT)

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது நீலகிரி, கோவையில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை,

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்மேற்கு பருவகாற்று காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மாலை நேரங்களில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்தவகையில் 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் மழை பதிவாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிற காரணத்தினால், கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களை தவிர மற்ற 36 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை பதிவான இயல்பான அளவை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வருகிற 25-ந் தேதி மாலை சென்னையில் மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல், வடமேற்கு வங்க கடல் பகுதியில் 23-ந் தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 23, 24 மற்றும் 25-ந் தேதிகளில் நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்து இருக்கிறது.

Next Story