போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் அனைத்து பொது நூலகங்களும் திறப்பு


போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் அனைத்து பொது நூலகங்களும் திறப்பு
x
தினத்தந்தி 25 July 2021 5:12 AM GMT (Updated: 25 July 2021 5:12 AM GMT)

தமிழகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பொது நூலகங்களையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தொற்றை தடுப்பதற்காக கடந்த மே 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

அரசின் சிறப்பான செயல்பாட்டினால் தொற்று படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட ஆணையிடப்பட்டு உள்ளது.

மாணவர்களின் நலன்

இந்த நிலையில் அனைத்து நூலகங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை கள் வரப்பெற்றுள்ளன. அதோடு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலன் மற்றும் வாசகர்களின் நலன் கருத்தில் கொள்ளப்பட்டது.

அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் நூலகங்களை தவிர்த்து, பொதுநூலகத்துறையின் கீழ் செயல்படும், அனைத்து நூலகங்களையும் 24-ந்தேதி முதல் (நேற்று) செயல்பாட்டிற்கு கொண்டு வர சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வழிகாட்டு நெறிமுறைகள்

திறக்கப்படும் நூலகங்கள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் செயல்பட வேண்டும்.

நூலகங்களை மூடுவதற்கு முன்பு தினமும் வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.

அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 15 வயதிற்குட்பட்டவர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் யாரையும் நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

தனிமனித இடைவெளி

நூலகத்திற்கு வரும் வாசகர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். வாசகர்கள், நூலகப்பணியாளர்கள், கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்த பிறகே நூலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வெப்பமானி பரிசோதனையும் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொருவர் இடையேயும் 6 அடி தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் தரையில் வட்டம் வரையப்பட வேண்டும்.

வாரம் ஒருமுறை

நூலகத்தில் குளிர்சாதன வசதியை தவிர்க்க வேண்டும். நூலகத்தை பயன்படுத்தும் முறை பற்றிய சுற்றறிக்கையை வாசகர்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

நூலகத்திற்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியின் விவரங்களை பட்டியலிட்டு நூலகத்தில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட நூலக அலுவலர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு வாரம் ஒருமுறை நூலகம் மற்றும் நூலக வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

கையுறை அணிய வேண்டும்

நூல் வழங்கும் பிரிவில் உள்ளவர்கள் கண்டிப்பாக கையுறை அணிந்திருக்க வேண்டும். நூல் பதிவேட்டை வாசகர்களுக்கு கொடுத்து, அவர்கள் சுட்டிக்காட்டும் நூல்களை வழங்க வேண்டும். அதன்படி, நூல்கள் இருக்கும் அடுக்குகளுக்குள் வாசகர் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படும் நூல்களை தினமும் மாற்ற வேண்டும். வாசகர்கள் திருப்பிக்கொடுக்கும் நூல்களை தனியே சேகரித்து வைத்துவிட்டு, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தியபிறகே அவற்றை நூல் அடுக்குகளில் அடுக்க வேண்டும்.

50 சதவீத இருக்கை

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இருக்கைகளில் 50 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக வாசகர்கள் வரும்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாசகர்களை அனுமதிக்க வேண்டும். வாசகர்களின் பெயரை பதிவு செய்து வைத்துக்கொண்டு பதிவின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து அவர்களை அழைக்க வேண்டும்.

சொந்த நூல்களை படிக்கும் பிரிவை பயன்படுத்தும் வாசகர்கள் எடுத்து வரும் நூல்கள், மடிக்கணினி உள்ளிட்ட மற்ற பொருட்களை வேறு வாசகர்களுடன் பகிரக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story