தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘ரோபோட்’ மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘ரோபோட்’ மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 30 July 2021 2:33 AM GMT (Updated: 30 July 2021 2:33 AM GMT)

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ‘ரோபோட்’ மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை, டாக்டர் ரேலா மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை, 

முன்னாள் மத்திய மந்திரியும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான எஸ்.ஜெகத்ரட்சகன் தொடங்கிய டாக்டர் ரேலா மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதன்முறையாக ‘ரோபோட்’ மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். ரேலா மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது ரேலா, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மகளான ஜே.ஆர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெ.ஸ்ரீ நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ‘ரிமோட்’ மூலம் ‘ரோபோட்’ கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு ரேலா மருத்துவமனையை நான் திறந்து வைத்தேன். இன்று மிக பிரமாண்டமாக இந்த மருத்துமனை வளர்ந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக டாக்டர் ரேலா மருத்துவமனை பெயர் பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. டாக்டர் முகமது ரேலா எங்கள் மண்ணுக்கு, தஞ்சை மண்ணுக்கு உரியவர். மயிலாடுதுறை அருகே கிளியனூர் எனும் கிராமத்தில் பிறந்தவர். அதில் எனக்கு ஒரு பெருமை. தனது மருத்துவ திறமையால் மக்களை அவர் வாழ வைத்துக் கொண்டிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. 4,500-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார். பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து கின்னசில் பெயர் பெற்றார்.

இத்தகைய திறமைசாலிக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்கி, அதற்கு அவரது பெயரையே வைத்துக்கொடுத்த ஜெகத்ரட்சகனின் பெருந்தன்மையை உள்ளபடியே பாராட்டியாக வேண்டும். அரசியல், கல்வி, ஆன்மிகப் பணிகளை போலவே மருத்துவப் பணிகளையும் அவர் திறம்பட செய்து கொண்டிருக்கிறார்.

மருத்துவத்தின் தேவையை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமே அதை உணர்த்தி விட்டது. கொரோனா ஒருவிதமான பயத்தை உருவாக்கி வைத்து இருக்கிறதே தவிர, அது நமது நடைமுறையை மாற்றி விடவில்லை. ஊரடங்கை ஓரளவு தளர்த்தினாலே உடனடியாக அனைவரும் கூட்டமாக சேர்ந்து விடுகிறோம்.

அரசாங்கம் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை உணராத சிலர் இருக்கிற காரணத்தால்தான் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அரசாங்கம் மட்டுமல்ல இது போன்ற மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள், சேவை நிறுவனங்கள் சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா காலகட்டத்தில் மருத்துவத் துறையினர் செய்த சேவைகளை நாம் நிச்சயம் மறக்க முடியாது. உயிரையே பணயம் வைத்து டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றி இருக்கிறார்கள். இன்னும் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள்-செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மாணவர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். புதிது புதிதாக நோய்கள் வருகின்றன. அவை பல நேரங்களில் மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத நோய்களாகவும் இருந்து விடுகின்றன. இத்தகைய சூழலில்தான் ரேலா மருத்துவமனை போன்ற உலகத் தரமான மருத்துவமனைகள் தமிழகத்தில் உருவாக வேண்டும். தொடக்க நிலையிலிருந்து கடினமான நிலை வரை உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்கான அதிநவீன சிகிச்சை மையமாக ரேலா மருத்துவமனை திகழ வேண்டும். டாக்டர்கள் ரேலா, ஸ்ரீ நிஷா, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் முகமது ரேலா பேசியதாவது:-

3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அவரது ராசிதான் இந்த மருத்துவமனை இன்று இந்தளவு உயர்ந்து நிற்கிறது. உலகத்தரமான மருத்துவமனையாக, அதிக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன்னணி மருத்துவமனையாக விளங்குகிறது. லண்டனில் 25 ஆண்டுகள் மருத்துவ பணியாற்றி இருக்கிறேன். கல்லீரல் அறுவை சிகிச்சையில் நிறைய தொழில்நுட்பங்களை கற்றேன். தற்போது தாய்மண்ணில் மருத்துவ சேவையாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.

மு.க.ஸ்டாலின் ராசியால்தான், நான் இப்போது உலக கல்லீரல் மாற்று சிகிச்சை மையத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். இந்த பொறுப்புக்கு இதுவரை இந்தியர் வந்ததே கிடையாது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது எல்லாவற்றுக்கும் காரணம், மு.க.ஸ்டாலின் இங்கே காலடி எடுத்து வைத்ததுதான் என்பேன். இப்போது முதல்-அமைச்சராக தமிழகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். மு.க.ஸ்டாலின் ஆளுமையை பார்த்து ஆச்சரியப்படாதவர்களே கிடையாது எனலாம்.

லண்டனில் பணியாற்றியபோது கூட நான் பணிபுரியும் மருத்துவமனையில் ரோபாடிக் சர்ஜரி நடைமுறையை கொண்டுவர முறையிட்டேன். நடக்கவில்லை. ஆனால் இந்த மருத்துவமனையில் நான் கேட்டதுமே, அண்ணன் ஜெகத்ரட்சகன் அதை கொண்டு வந்து சாதித்துவிட்டார்.

ஒருகாலத்தில் கல்லீரல் அறுவை சிகிச்சை என்றாலே வயிற்று பகுதியை பெரிதாக கீறிடவேண்டும். இதனால் ஏற்படும் பெரிய தழும்புகளால் இளம்பெண்கள் பலருக்கு திருமணமே தள்ளி போயிருக்கிறது. மேலும் காயம் குணமடைய பல நாட்களும் ஆகும். ஆனால் ரோபாடிக் சர்ஜரி சிகிச்சை மூலமாக கைகளால் செய்வதை காட்டிலும் துல்லியமாக, ரத்தம் அதிகம் வீணாகாமல் நேர்த்தியாக அறுவை சிகிச்சை செய்யமுடியும்.

இதுபோல நவீன தொழில்நுட்பம் ஜப்பான், கொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இருக்கிறது. இதற்கு அதிகளவில் செலவும் ஆகும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குள் கொண்டுவந்து அனைத்து தரப்பினருக்கும் இச்சேவை கிடைக்க செய்திருக்கிறோம். முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்திலும், எந்தவித கூடுதல் செலவுகள் இல்லாமலும் அனைத்து தரப்பினருக்கும் இந்த சேவையை வழங்குகிறோம். பணக்காரர்களுக்கு ஒரு மாதிரி, ஏழைகளுக்கு ஒரு மாதிரி என சிகிச்சைகள் வழங்கப்படும் நிலை இனி இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது ரோபோட் மூலமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதுதொடர்பான விளக்கத்தையும் டாக்டர் ரேலா அளித்தார்.

விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் பங்கேற்று பேசியதாவது:-

முதல்-அமைச்சர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றபோது, இந்திய துணைக்கண்டத்தை ஒரு மிகப்பெரிய சூறாவளி (கொரோனா) சுழற்றி அடித்து கொண்டிருந்தது. அந்த சூறாவளியில் இருந்து தமிழகத்தை மிக சிறப்பாக மீட்டமைக்காக மக்கள் சார்பில் நன்றி கூறுகிறேன். தான் பொறுப்பேற்ற அடுத்த கணத்திலேயே, அந்த பொறுப்புக்கேற்ற பணியில் இறங்கி, மருத்துவத்துறை மட்டுமன்றி பிற துறைகளையும் பணிகளில் ஈடுபட செய்து மக்களை காப்பாற்றிய பெருமை மு.க.ஸ்டாலினை சாரும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு, எஸ்.ஜெகத்ரட்சகனின் மகள் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா, மருமகள் டாக்டர் ஸ்வேதா சந்தீப் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி நன்றி கூறினார். விழாவில் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, வி.செந்தில்பாலாஜி, மஸ்தான் உள்பட அமைச்சர்களும், உதயநிதி ஸ்டாலின், அண்ணாநகர் மோகன், வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன் உள்பட எம்.எல்.ஏ.க்களும், ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பாரத் பல்கலைக்கழகத்தின் சேர்மன் சந்தீப் பாலன், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ரோபோட் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே நடந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதுதான் முதல்முறையாகும். இந்தியாவிலேயே ‘ரோபோட்’ மூலம் குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறை ரேலா மருத்துவமனையில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டுள்ளது என்று டாக்டர் முகமது ரேலா தெரிவித்துள்ளார்.

Next Story