ஆடி விற்பனைக்கு திடீர் தடை: ‘எங்கள் தலையில் இடி விழுந்தது போன்று இருக்கிறது’ வியாபாரிகள் குமுறல்


ஆடி விற்பனைக்கு திடீர் தடை: ‘எங்கள் தலையில் இடி விழுந்தது போன்று இருக்கிறது’ வியாபாரிகள் குமுறல்
x
தினத்தந்தி 1 Aug 2021 2:25 AM GMT (Updated: 1 Aug 2021 2:25 AM GMT)

சென்னையில் பல்வேறு இடங்களில் கடை வீதிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் ‘எங்களது தலையில் இடி விழுந்தது’ போன்று இருக்கிறது என்று புலம்புகிறார்கள்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிக்கும்போது கூடுதல் தளர்வுகள் குறித்து அறிவிப்பையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவது வழக்கம். ஆனால் தற்போது வருகிற 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் புதிய தளர்வுகள் எதுவும் அளிக்கப்படவில்லை. மக்கள் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், ஜாம்பஜார், பாரிமுனை, ராயபுரம், அமைந்தகரை, செங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகளை நேற்று முதல் வருகிற 9-ந் தேதி காலை 6 மணி வரை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கொத்தவால்சாவடி மார்க்கெட் இன்று முதல் வருகிற 9-ந் தேதி காலை 6 மணி வரை திறப்பதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி உத்தரவையடுத்து இந்த வணிக தள பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகள் போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் அடைப்பு பற்றி தகவல் கிடைக்காமல் ஆடி தள்ளுபடியில் பொருட்கள் வாங்க வேண்டும் என்று எண்ணி தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வெறும் கையோடு திரும்பி சென்றனர்.

கடைகள் அடைப்பு பற்றி தகவல் அறியாமல் சீருடையுடன் வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு இந்த மாத சம்பளம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று மனக்கவலை அடைந்தனர். பின்னர் சோகத்துடன் தங்கள் அறைக்கு திரும்பி சென்றனர். பல ஊழியர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் வரை பரபரப்புடன் காணப்பட்ட முக்கிய வணிக வளாக பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. மாநகராட்சியின் இந்த திடீர் அறிவிப்பு வணிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

இதுகுறித்து தியாகராயநகர் ரங்கநாதன் தெரு வணிகர்கள் சிலர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் வணிகர்களின் வாழ்வாதாரத்தை ஏற்கனவே சீர்குலைத்துவிட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மெல்ல, மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வந்தோம். ஆடி மாத விற்பனையை நம்பி அதிகளவில் பொருட்களை கொள்முதல் செய்து வைத்துள்ளோம். இதன் மூலம் ஏற்கனவே வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்று எண்ணி இருந்தோம். ஆனால் ஆடி விற்பனைக்கு தடை விதித்துள்ள இந்த உத்தரவு எங்கள் தலையில் இடி விழுந்தது போன்று உள்ளது.

வணிகத்தை விட மனித உயிர்கள் தான் முக்கியம். அதில் எந்தவொரு மாற்று கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் எங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story