குடும்பத் தலைவிக்கு ரூ.1,000: ரேஷன் அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? அமைச்சர் சக்கரபாணி விளக்கம்


குடும்பத் தலைவிக்கு ரூ.1,000: ரேஷன் அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2021 1:08 AM GMT (Updated: 4 Aug 2021 1:08 AM GMT)

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை, 

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? என்று யாரும் பீதி அடைய வேண்டாம் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை 99 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டன.

கடந்த ஜூலை 31-ந் தேதியுடன் அதை வழங்கும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டாலும், அந்த நிவாரணங்களை பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரிடம் விண்ணப்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் வரை 1.74 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. மே, ஜூன், ஜூலையில் 5.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஆக மொத்தம் 7.19 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 5.87 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 4.52 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. 1.35 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3.38 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது. சில மாவட்டங்களில் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார். இந்த திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய பலர் முற்படுவதாகவும், அதற்காக இ-சேவை மையங்களில் காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதில் யாரும் பீதி அடைய வேண்டாம். உரிய நேரத்தில் இந்தத் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார்.

ரேஷன் கடைகளுக்கு பொருள் வழங்குவதற்கான சிவில் சப்ளைஸ் டெண்டர் விவகாரத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story