மாநில செய்திகள்

ஒலிம்பிக்கில் விளையாடிய வாளை முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்குப் பரிசாகக் கொடுத்த பவானி தேவி + "||" + Sword played in the OlympicsTo chief-Minister Stalin Bhavani Devi gave the gift

ஒலிம்பிக்கில் விளையாடிய வாளை முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்குப் பரிசாகக் கொடுத்த பவானி தேவி

ஒலிம்பிக்கில் விளையாடிய வாளை முதல்-அமைச்சர்  ஸ்டாலினுக்குப் பரிசாகக் கொடுத்த பவானி தேவி
ஒலிம்பிக்கில் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்ட பவானி தேவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார்.
சென்னை

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் நிலையில், இந்தியா சார்பில் 100-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியா சார்பில் வாள்வீச்சுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி கலந்து கொண்டார். இரண்டாவது சுற்று வரை முன்னேறிய அவர், பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார்.

இதையடுத்து, சென்னை திரும்பிய அவர், இன்று  தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரைத் தன் தாயாருடன் சந்தித்தார்.

அதன் பின்னர்  பவானிதேவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒலிம்பிக்கில் நாங்கள் விளையாடியதை முதல்-அமைச்சர் பார்த்துள்ளார். மிகவும் நன்றாக விளையாடியதாக பாராட்டினார். போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பும் எங்களுடன் இருமுறை கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார். எங்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக வாள்வீச்சுப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கக்கூடியதாக அது அமைந்துள்ளது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். குறிப்பாக என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அதைக் குறிப்பிட்டு என் அம்மாவையும் முதல்வர் பாராட்டியிருந்தார்.

முதல்-அமைச்சருக்கு என்னுடைய வாளை நான் பரிசாகக் கொடுத்தேன். இந்தியாவில் வாள்வீச்சில் முதல் முறையாகப் பயன்படுத்திய வாள் என்பதால் அதனைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும், அதற்கு இந்த வாள் தேவை எனக்கூறி எனக்கே அதைத் திருப்பிப் பரிசாகக் கொடுத்தார்.

என்ன உதவியானாலும் செய்யத் தயார், அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும் எனக் கூறினார். தமிழக அரசின் உறுதுணை நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அளித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்தோம்.  வருங்காலத்தில் உதவிகரமாக இருப்பதாக நம்பிக்கை அளித்தார். மின்துறையில் வேலை செய்வதால் அது குறித்தும் முதல்-அமைச்சர் கேட்டிருந்தார். அடுத்ததாக மின்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.

இந்த அளவு நான் சென்றிருக்கிறேன் என்றால், எஸ்டிஏடி (sport development authority of tamilnadu) அமைப்பிலிருந்து வரும் 'எலைட் ஸ்காலர்ஷிப்' எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த உதவி, கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு முக்கியமாக இருந்தது. வெளிநாடுகளில் பயிற்சி பெற்று, ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட முடிந்தது. இன்னும் பக்கபலமாக இருந்தால் நன்றாக விளையாடி நம் நாட்டுக்கு அதிக பதக்கங்களை வெல்வேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் எனக்கு ஊக்கம் தந்தார். ஒலிம்பிக் சென்றால் பதவி உயர்வு நிச்சயம் கொடுப்பார்கள். முதல் முறையாகச் சென்றால் இன்னும் நல்ல பதவி கொடுப்பார்கள். அதனை நான் எதிர்பார்க்கிறேன். ஏற்கனவே எனக்குப் பிற மாநிலங்களிலிருந்தும் மத்திய அரசிடமிருந்தும் வேலைக்கான அழைப்புகள் வந்தன. ஆனால், எனக்குத் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் இங்கு இருக்கிறேன். இதில் சாதகமான செய்தி வரும் என நம்புகிறேன் இவ்வாறு பவானி தேவி தெரிவித்தார்.