கார்களை வாடகைக்கு எடுத்து விற்று மோசடி செய்தவர் கைது


கார்களை வாடகைக்கு எடுத்து விற்று மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2021 5:03 PM GMT (Updated: 4 Aug 2021 5:03 PM GMT)

வாடகைக்கு எடுத்து கார்களை விற்று மோசடி செய்தவர் கைது

பாகூர், 
கார்களை வாடகைக்கு எடுத்து விற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். 6 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாடகை கார்கள்

அரியாங்குப்பம் ஆர்.கே நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 34). ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகிறார். இவரது நண்பர் ரமேஷ். இவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றினார். 
இவர்கள் தமிழக அரசின் சுகாதாரத்துறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களை அழைத்துச்செல்ல கார்கள் தேவைப்படுவதாக கூறி பலரிடம் குறிப்பிட்ட தொகையை மாத வாடகைக்கு பேசி எடுத்துள்ளனர்.
அதன்படி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த உத்தரலிங்கம், நெல்லித்தோப்பைச் சேர்ந்த ஜெயபால், திருவாண்டார்கோவிலை சேர்ந்த சிவபெருமாள் ஆகியோருக்கு சொந்தமான 3 கார்களை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ரூ.பல லட்சத்துக்கு     விற்று மோசடி 

பின்னர் ஒரு மாதம் வாடகையை சரியாக கொடுத்துள்ளனர். அதன்பிறகு பல மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. கார்களை வாடகை எடுத்தவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதுதொடர்பாக விசாரித்தபோது தினேஷ்குமார், ரமேஷ் இருவரும் சேர்ந்து வாடகைக்கு எடுத்த கார்களை வேறு நபர்களிடம் பல லட்ச ரூபாய்க்கு விற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கோரிமேடு, அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் ஆகிய போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், ரமேஷ் ஆகியோரை  வலைவீசி தேடி வந்தனர்.

கடலூரில் கைது

இந்த நிலையில் தினேஷ்குமார், கடலூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் கடலூருக்கு சென்று தினேஷ்குமாரை சுற்றிவளைத்து  கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் புதுவை மேட்டுப்பாளையம் கனரக வாகன முணையம் மற்றும் அங்குள்ள தொழிற்பேட்டை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.45 லட்சமாகும். பின்னர் தினேஷ்குமாரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரமேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story