கருணாநிதி நினைவுதினம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்


கருணாநிதி நினைவுதினம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Aug 2021 6:50 PM GMT (Updated: 7 Aug 2021 6:50 PM GMT)

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, 

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' துறையில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் 2,581 மனுக்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 1,170 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, 15 பயனாளிகளை நேரில் அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவர்களில் 6 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலி, ஒரு பயனாளிக்கு தையல் எந்திரம், 2 பயனாளிகளுக்கு திறன்பேசி, 2 பயனாளிகளுக்கு காதொலிக்கருவி, ஒரு பயனாளிக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டன.

அப்போது தலைமைச் செயலாளர் இறையன்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story