தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சென்னை ஐகோர்ட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சென்னை ஐகோர்ட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 9 Aug 2021 7:42 PM GMT (Updated: 9 Aug 2021 7:42 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.

சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்தநிலையில், தமிழக முதன்மைச்செயலாளர் தரப்பில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த ஆண்டறிக்கையை ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

அறிக்கை தாக்கல்

இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஹென்றி திபேன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘எந்த ஆயுதமும் இல்லாமல் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. நாகரீகமான சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவம் ஏற்புடையதா?’ என கேள்வி எழுப்பியிருந்தது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை, தமிழக முதன்மை செயலரின் ஆண்டு அறிக்கை ஆகியவற்றை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

பின்னர் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றியது. இதற்கிடையே தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி வி.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையின் அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் தமிழக பொதுத்துறை சார்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை ஆணையம்

இதில் தமிழக அரசின் பதில் மனுவில், ‘இச்சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி பல்வேறு ஆதாரங்களை சேகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய ‘ஹார்ட் டிஸ்க்' பெறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியரின் செல்போன் எண்ணின் தொடர்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து 718 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, ஆயிரத்து 126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் முதல் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு வேலை

துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம், லேசான காயமடைந்த 64 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 21 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளன. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கடந்த மே 14-ந்தேதி அளித்த இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின்படி போராட்டக்காரர்களுக்கு எதிரான 38 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. நிவாரண உதவியாக 84 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கால அவகாசம் வழங்கி விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story