லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூத்துக்குடி சென்றதால் பரபரப்பு


லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூத்துக்குடி சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 8:11 PM GMT (Updated: 11 Aug 2021 8:11 PM GMT)

லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூத்துக்குடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. நேற்று முன்தினம் வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி திடீரென்று நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற அவர் எங்கு சென்றார்? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எங்கு சென்றார்?

இதனால் யூகங்கள் அடிப்படையில் அவர் நெல்லைக்கு சென்றதாகவும், தென்காசி சென்றதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. போலீசாரும், உளவுப்பிரிவினரும் அவர் எங்கு சென்றார்? என்று தொடர்ந்து விசாரித்து வந்தனர். அதே நேரத்தில் பிற்பகலில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் வேலுமணி பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் அந்த விமானத்தில் பயணிப்பாரா?, அல்லது வேறு மார்க்கமாக சென்னைக்கு செல்வாரா? என்ற பரபரப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு வேலுமணி மீண்டும் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளக்கம்

நான் நேற்று மதியம் (அதாவது நேற்று முன்தினம்) கோவிலுக்கு வருவதாக இருந்தது. இரவில் இங்கு தங்குவதாகவும் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் நேற்றைய சூழ்நிலை காரணமாக இன்று (நேற்று) கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தேன்.

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து எங்கள் தலைவர்கள் அறிக்கை விட்டு உள்ளனர். இன்னும் 2 நாட்களில் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அனுமதியை பெற்று விளக்கமாக விரிவாக பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மடத்தில் பூஜை

பின்னர் வேலுமணி, விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், திருச்செந்தூரில் சன்னதி தெருவில் உள்ள மடத்தில் வைத்து சத்ரு சம்ஹார பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. பூஜை முடிந்த பிறகு, அவரது குடும்பத்தினர் காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென்று தூத்துக்குடிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story