புற்றுநோய், மஞ்சள் காமாலையால் கடும் பாதிப்பு: 50 வயது பெண்ணுக்கு நவீன விசைத்துளை அறுவை சிகிச்சை


புற்றுநோய், மஞ்சள் காமாலையால் கடும் பாதிப்பு: 50 வயது பெண்ணுக்கு நவீன விசைத்துளை அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 13 Aug 2021 9:12 PM GMT (Updated: 13 Aug 2021 9:12 PM GMT)

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய், மஞ்சள் காமாலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட 50 வயது பெண்மணிக்கு 7½ மணி நேரம் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி மீரா (வயது 50). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, 2 மாதத்துக்கு முன்பு மஞ்சள் காமாலை ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றபோதிலும் எந்த பலனும் இல்லை. இதனால் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மீராவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு உடனடியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன்படி நவீன விசைத்துளை(‘லேப்ரோஸ்கோபிக்’) அறுவை சிகிச்சை மூலம் அதனை வெற்றிகரமாக அகற்றினர்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.மணி கூறியதாவது:-

7½ மணி நேரம்

புற்றுநோய் மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட மீராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தோம். அவருக்கு வழக்கமான முறையில் அறுவை சிகிச்சை செய்தால் 12 செ.மீ. அளவுக்கு வயிற்றை கிழித்து பித்தக்குழாய் உள்ளிட்டவைகளை அகற்றவேண்டும். இதனால் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் யு.பி.சீனிவாசன் தலைமையிலான குழுவினர் 7½ மணி நேரம் போராடி விசைத்துளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

தற்போது மீரா எந்த ஒரு பக்கவிளைவுமின்றி நலமுடன் உள்ளார். கூடிய விரைவில் வீடு திரும்புவார். இந்த அறுவை சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் செய்தால் ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரை செலவு ஆகும். தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் விசைத்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசதிகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story