சட்டசபையை தவிர வேறு இடமாக இருந்திருந்தால் ‘மு.க.ஸ்டாலினை கட்டிப்பிடித்து அழுதிருப்பேன்’ அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி


சட்டசபையை தவிர வேறு இடமாக இருந்திருந்தால் ‘மு.க.ஸ்டாலினை கட்டிப்பிடித்து அழுதிருப்பேன்’ அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Aug 2021 12:04 AM GMT (Updated: 24 Aug 2021 12:04 AM GMT)

சட்டசபையை தவிர வேறு இடமாக இருந்திருந்தால் மு.க.ஸ்டாலினை கட்டிப்பிடித்து அழுதிருப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

சென்னை,

சட்டசபையில் 50 ஆண்டு கால துரைமுருகனின் மக்கள் பணியை பாராட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பாராட்டு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த பாராட்டு தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து துரைமுருகன் பேசியதாவது:-

என் வாழ்நாளில் எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால் வார்த்தைகளை தேடி நான் அலைந்தது இல்லை. ஆனால் இன்றைக்கு எனக்கு வார்த்தையும் வரவில்லை. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள், தோல்விகள் நடந்தாலும், எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல, என்னுடைய தலைவர் (மு.க.ஸ்டாலின்) ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, அவையிலேயே எல்லா கட்சி தலைவர்களும் ஒட்டு மொத்தமாக பாராட்டியதை நினைக்கும்போது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் தலைவர் இன்றைக்கு என் மீது காட்டிய பாசம், கொட்டிய அன்பு வார்த்தைகள் இதை கேட்டு நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சாதாரணமான கிராமத்து பையன். ஒரு விவசாயியின் மகன்.

கட்டிப்பிடித்து அழுது இருப்பேன்

ஒரு நண்பர் போல கருணாநிதி என்னிடம் பழகினார். நான் யார்?, என்ன சாதி?, எந்த ஊர்? என்று கூட அவர் கேட்டதில்லை. என்மீது தனி பற்று, பாசம் வைத்திருந்தார். என்னுடன் மணிக்கணக்கில் பேசக்கூடியவர். எனக்கு தலைவர் அவர் தான். எனக்கு வழிகாட்டி அவர் தான். எனக்கு எல்லாமாய் நின்றவரும் அவர்தான். அவர் மறைவுக்கு பிறகு எனக்கு அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் இருக்குமோ என்று நினைத்தேன்.

ஆனால் மு.க.ஸ்டாலின் தந்தையின் பாசத்தை மிஞ்சுகிற அளவுக்கு நான் நினைத்து பார்க்காத இப்படிப்பட்ட ஒரு கவுரவத்தை, இந்த அவையில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினீர்களே, என் தலைவர் என்ற முறையிலும், முதல்-அமைச்சர் என்ற முறையிலும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் ஆற்றுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. எல்லா கட்சி தலைவர்களும் பாராட்டியிருக்கிறீர்கள் இதற்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.

என் மீது இவ்வளவு, அன்பும், பாசமும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்திருக்கிறார். இந்த அவையை தவிர வேறு இடமாக இருந்திருந்தால் நான் அவரை (மு.க.ஸ்டாலின்) கட்டிப்பிடித்து அழுது இருப்பேன்.

எனக்கு பேச தெரியவில்லை (இந்த நேரத்தில் துரைமுருகன் கண் கலங்கி நின்றார்) முதல் முறையாக எனக்கு பேச தெரியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறேன். எந்த நம்பிக்கையோடு என்னை வாழ்த்தினீர்களோ, அந்த நம்பிக்கைக்கு சேதாரம் இன்றி மீதமுள்ள நாட்களில் வாழ்ந்து காட்டுவேன். என் மூச்சு இருக்கிற வரை இந்த இயக்கம், என் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்பேசியதாவது:-

எல்லோருடைய இதயங்களை கவர்ந்தவராக துரைமுருகன் உள்ளார். 50 ஆண்டுகால சட்டசபை பணிகளில் நீண்ட நெடிய வரலாற்றை கொண்டவர். 2001-ம் ஆண்டு முதல் சட்டசபையில் துரைமுருகனின் நடவடிக்கைகளை கவனித்து இருக்கிறேன். அவரிடம் இருந்து நானும் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன் முதல்-அமைச்சர் கூறியவாறு துரைமுருகன் அவையில் எல்லோரையும் சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், ரசிக்க வைக்கவும் தெரிந்தவர். ஆளும் தரப்பு, எதிர்தரப்பு உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக செயல்படுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

சபாநாயகர் வாழ்த்து

சபாநாயகர் அப்பாவு:- முதல்-அமைச்சருக்கு அவை முன்னவர் துரைமுருகன் சாணக்கியராக இருக்கிறார். அவை சிறப்பாக நடத்துவதற்கு அவை முன்னவர் துரைமுருகன் எனக்கு பேருதவியாக இருக்கிறார். அவர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோரும் துரைமுருகனை பாராட்டி பேசினர்.

Next Story